Ghee in Tamil | நெய் காய்ச்சும் முறை | Clarified Butter in Tamil | How to make ghee in Tamil

நெய் காய்ச்சுவது மிகவும் சுலபமானதாகும். கடைகளில் கிடைக்கும் வெண்ணையை வைத்து 15 – 20 நிமிடங்களுக்குள்ளாகவே சுவையான நெய்யை வீட்டிலேயே செய்யலாம்.  ஆனால் கடைகளில் வெண்ணெய் வாங்கும் பொழுது தரமான வெண்ணெய் கிடைக்கிறதா என பார்த்து வாங்கவும்.  அதற்கு பதிலாக வீட்டிலேயே தினமும் பால் காய்ச்சும் பொழுது கிடைக்கும் ஆடையை சேர்த்து வைத்த அதிலிருந்து வெண்ணை எடுத்து பின்னர் நெய் செய்து செய்யும் பொழுது சுத்தமாகவும் இருக்கும், அதே சமயத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் அது போன்ற சூழ்நிலை அனைவருக்கும் அமைவதில்லை.  எனவே தரமான நெய் செய்வதற்கு தரமான நெய் கடைகளில் கிடைத்தாலே போதுமானது.

இப்பொழுது உப்பு சேர்த்த வெண்ணை  கிடைக்கிறது,  அது தவிர உப்பு சேர்க்காத வெண்ணைஸ்வீட் க்ரீம்  வெண்ணெய் என விதவிதமான நெய் கிடைக்கிறது.இவற்றில் உப்பு சேர்க்காத வெண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும். அமுல் அல்லது ஆவின் போன்ற உங்களது விருப்பமான பிராண்டை பயன்படுத்திக் கொள்ளலாம். 


சுவையான நெய் செய்ய சில குறிப்புகள்

  • நெய் செய்வதற்கு உப்பு சேர்க்காத வெண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும்.  ஒருவேளை உப்பு சேர்த்த வெண்ணெய்யில் செய்வதாக இருந்தால், செய்து முடித்த பின்னர் அடியில் இருக்கும் உப்பு கருப்பாக மாறிவிடும் அதனை வடிகட்டிக் கொள்ளலாம்.
  • வாய் அகன்ற, அடி கனமான பாத்திரம் பயன்படுத்தி  கொள்ளவும், குறைவான தீயில் வைத்து செய்யவும்.
  • 500 கிராம் வெண்ணையில் 400 கிராம் அளவிற்கு நெய் கிடைக்கும்,  எனவே தேவைக்கு ஏற்ப வெண்ணை எடுத்துக் கொள்ளவும்.
  • நெய் உருகி பொன்னிறமாக வரும்பொழுது அதில் சிறிதளவு முருங்கைக் கீரை கொழுந்து அல்லது கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
  • நெய்யை  வடிகட்டும் பொழுது நெருக்கமான வடிகட்டி பயன்படுத்திக் கொள்ளவும் அல்லது வடிகட்டியின் மேல் ஒரு சிறிய வெள்ளை துணி போட்டு அதில் வடிகட்டிக் கொள்ளவும்.
  • நன்றாக ஆரிய பின்னர் பாட்டிலை மூடி வைக்கவும்,  நெய்யை எடுக்கும் பொழுது ஈரம் இல்லாத சுத்தமான கரண்டி  பயன்படுத்தி எடுக்கவும். 

 

தேவையான பொருட்கள்

  • வெண்ணெய் – 1  கிலோ

நெய் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – 1 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • ஏலக்காய் – 4
  • முந்திரிப்பருப்பு – 10
  • நெய் –  சிறிதளவு

செய்முறை

1. ஒரு வாய் அகன்ற அடி கனமான பாத்திரத்தில் 1 கிலோ  வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. குறைவான தீயில் வைத்து காய்ச்சவும்.

3. வெண்ணெய் கரைந்த பின்னர் மேலே வெள்ளையாக படிந்து இருப்பதை பார்க்கலாம்,  அதனை விருப்பப்பட்டால் அகற்றி விடலாம் அல்லது அப்படியே விடலாம்.

4. குறைவான தீயில் வைத்து மேலும் 5 – 6 நிமிடங்கள் கொதிக்க வைத்தால், நிறம் பொன்னிறமாக மாறி வருவதை காணலாம்.

5. இந்த சமயத்தில் முருங்கைக்கீரை அல்லது கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

6. ஒரு 15 – 20 நிமிடங்களுக்குள்ளாகவே வெண்ணெய் கரைந்து  நெய் பொன்னிறமாக மாறுவதை காணலாம். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

7. சுத்தமான வடிகட்டியில் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

8. ஆறிய பின்னர் மூடி வைக்கவும்.

நெய் உருண்டை செய்முறை

1. நெய் காய்ச்சிய பின்னர் பாத்திரத்தில் 4 – 5 கரண்டி எடுக்காமல் விட்டு விடவும்.

2. ஒரு அகலமான பானில் 1 கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும் அதனை மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

3. பின்னர் அதனை தனியே எடுத்து ஆற விடவும். பாசிப்பருப்பு ஆறிய பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

4. ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 4 ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

5. சிறிதளவு நெய்யில் 10 முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

6. நெய் உருக்கிய பாத்திரத்தில் லேசான சூடு இருக்கும்படி வைக்கவும் அல்லது அடுப்பை பற்ற வைத்து குறைவான தீவில் ஓரிரு நிமிடங்கள் வைக்கவும். இப்பொழுது அரைத்து  வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும்  சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

7. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

8. பாத்திரத்தில் உள்ள நெய் முழுவதுமாக வரும் அளவிற்கு நன்றாக கிளறவும்.

9. ஓரளவு சூடு இருக்கும் பொழுது சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

10. சுவையான நெய் உருண்டை தயார்.

Leave a Reply