பாசிப்பருப்பு உருண்டை சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இனிப்பு வகை இதனை நீங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு செய்யலாம் அல்லது மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் செய்யலாம். இது நெய் உருண்டை என்றும் அழைக்கப்படுகிறது.பாசிப்பருப்பு உருண்டை மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை, கடையில் கிடைக்கும் தின்பண்டங்களை காட்டிலும் இது ஆரோக்கியத்தில் சிறந்தது. பாசிப்பருப்பு உருண்டை செய்முறை விளக்கப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பாசிப்பருப்பு உருண்டை செய்ய சில குறிப்புகள்
1. நீங்கள் விருப்பப்பட்டால் சர்க்கரை தூளுக்கு பதிலாக வெல்லத்தை பொடித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. கை பொறுக்கும் சூட்டில் நெய்யை ஊற்றி, உருண்டைகள் பிடிக்கவும்.
3. ஆறிய நெய்யில் உருண்டைகள் செய்ய முடியாது.
4. நீங்கள் விருப்பப்பட்டால் 3/4 கப் நெய் சேர்த்து செய்யலாம், கூடுதல் நெய் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் கெட்டியாக இருக்கும்.
பாசிப்பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் பாசிப்பருப்பு
- 1 கப் சர்க்கரை
- 1/2 கப் நெய்
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
- 10 முந்திரி பருப்புகள்
பாசிப்பருப்பு உருண்டை செய்முறை
1. பாசிப்பருப்பை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.
3. மிக்ஸி ஜாரில் 1 கப் சர்க்கரை சேர்த்து அதனை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு சிறிய பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
5. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, பொடித்த சக்கரை, ஏலக்காய் தூள், மற்றும் வறுத்த முந்திரிசேர்க்கவும்.
6. சூடான நெய் சேர்த்து கலக்கவும்.
7. கைகளால் கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.
8. இப்போது சுவையான பாசிப்பருப்பு உருண்டை தயார்.