அரிசி பருப்பு சாதம் கோவை மாவட்டத்தின் பாரம்பரியம் மிக்க உணவுவகை . இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சாதம். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும்.
அரிசி பருப்பு சாதம் அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, மற்றும் சாம்பார் தூள் சேர்த்து செய்யப்படுகிறது. இதனை மேலும் சுவையாக மற்றும் ஆரோக்கியமாக்க விரும்பினால் கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, அல்லது முருங்கக்காய் சேர்த்து செய்யலாம். அரிசி பருப்பு சாதம் உருளைக்கிழங்கு வருவல், தயிர் பச்சடி, வெண்டக்காய் பொரியல், மற்றும் அப்பளத்துடன் பரிமாறலாம்.
சுவையான அரிசி பருப்பு சாதம் செய்ய சில குறிப்புகள்
- விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், போன்றவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
- குக்கரை மூடுவதற்கு முன்பு 2 தேக்கரண்டி நெய் சேர்த்து, பின்னர் மூடினால் சாதம் மிகவும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- அரிசி பருப்பு சாதம் செய்யும் பொழுது சாம்பார் பொடி உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம், பச்சைமிளகாய் சேர்த்திருப்பதால் கவனமுடன் காரம் சேர்த்துக் கொள்ளவும்.
- சாதத்திற்கு தண்ணீர் சேர்க்கும் பொழுது குக்கரையும், அரிசியின் தரத்தையும், பொருத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அல்லது சாதம் குழைந்து விடும் வாய்ப்புள்ளது.
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1/4 தேக்கரண்டி வெந்தயம்
- கருவேப்பிலை சிறிதளவு
- 2 பச்சை மிளகாய்
- 5 பூண்டுப் பற்கள்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1 தேக்கரண்டி சாம்பார் தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மற்றும் 1/2 கப் துவரம் பருப்பை எடுத்து நன்கு கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .
2. பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும்,1/2 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம், கருவேப்பிலை சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
3. உரித்து வைத்த பூண்டு பற்கள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. 1 வெங்காயம சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. 1 தக்காளிசேர்த்து வதக்கவும் .
6. தற்பொழுது 1 தேக்கரண்டி சாம்பார் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
7. பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும் .
8. குக்கரை மூடி வெயிட் போடவும். 3 சத்தம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
9. பிரஷர் ரிலீஸ் ஆனதும், குக்கரை திறந்து மென்மையாக கிளறிவிடவும் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.