கத்தரிக்காய் கொஸ்து சிதம்பரத்தில் செய்யப்பட்டு தமிழகமெங்கும் பெயர் பெற்றது. கத்திரிக்காய் கொஸ்து இட்லி, தோசை, மற்றும் வெண் பொங்கலுடன் சுவையாக இருக்கும். இட்லி / தோசையை சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது இது போன்ற வித்தியாசமான கொஸ்து வகைகளை செய்து அசத்தலாம்.
கத்திரிக்காய் கொஸ்து பலவிதமாக செய்யப்பட்டாலும் சிதம்பரத்தின் பாரம்பரியமிக்க செய்முறை நான் இங்கு ஷேர் செய்து இருக்கிறேன். நீங்களும் சுவையான கத்திரிக்காய் கொஸ்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
கத்திரிக்காய் கொஸ்து செய்ய தேவையான பொருட்கள்
- 3 ஊதா நிற கத்திரிக் காய்கள்
- 10 – 15 சின்ன வெங்காயம்
- நெல்லிக்காய் அளவு புளி
- 2 காய்ந்த மிளகாய்
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
கொஸ்துப் பொடி செய்ய தேவையான பொருட்கள்
- 5 காய்ந்த மிளகாய்
- 1 தேக்கரண்டி கடலை பருப்பு
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி
- 1 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
1. கத்தரிக்காய் காம்புகளை நீக்கி விட்டு, கழுவி நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கொஸ்து பொடி
2. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
3. அதனுடன் கொத்தமல்லி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து 2/3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
4. பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆற வைக்கவும்.
5. ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய் கொஸ்து
1. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. அதனுடன் கத்திரிக்காயை சேர்த்து மிதமான சூட்டில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு / கத்திரிக்காய் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
3. பின்னர் ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு வெங்காயம் மற்றும் கத்திரிக்காய் கலவையை நன்றாக மசித்து விடவும்.
4. மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
5. அதனுடன் ஊற வைத்து கரைத்த புளியை சேர்க்கவும்.
6. பின்னர் உப்பு மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
7. கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை வெங்காயத்தை சேர்க்கவும்.
8. அதனுடன் கொஸ்து பொடி சேர்த்து மிதமான சூட்டில் 3-5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
9. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறலாம்.