சில்லி இட்லி ஒரு இந்தோ – சைனீஸ் வகை உணவு. இது இட்லி, பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சாஸ், சோயா சாஸ், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது முற்றிலும் மாறுபட்ட, சுவையான இட்லி. ஆறி போன அல்லது மற்றும் மீதமான இட்லியில் செய்யலாம், சுவையாக இருக்கும். அதுதவிர குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கும் சுவையாக இருக்கும், மேலும் செய்வது மிகவும் சுலபமானது, விரைவாகவும் செய்யலாம்.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான உணவு வகை இட்லி. தினமும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் இட்லி உண்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இட்லியில் ஏராளமான வகைகள் உள்ளன, தட்டு இட்லி, சாம்பார் இட்லி, கோவன் இட்லி, மங்களூர் இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி, இது தவிர சில்லி இட்லி, மசாலா இட்லி, போன்றவை நவீன காலத்தில் புகழ்பெற்று வருகின்றன. மசாலா இட்லி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றுடன் இட்லி சேர்த்து செய்யப்படுகிறது.
சுவையான சில்லி இட்லி செய்ய சில குறிப்புகள்
- சில்லி இட்லி செய்ய ஆறிப்போன இட்லி பயன்படுத்தவும். சூடான இட்லியில் சில்லி இட்லி செய்ய முடியாது.
- இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம் அல்லது மினி இட்லி பயன்படுத்திக்கொள்ளலாம்.
- உப்பு சேர்க்கும்போது அரை தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- நீங்கள் எண்ணெயில் பொரிக்கலாம் அல்லது தோசைக்கல்லில் சிறிதளவு என்னை சேர்த்து இட்லி துண்டுகளை பிரட்டி எடுத்துக்கொள்ளலாம்.
- பச்சை மிளகாய், சாஸ், போன்றவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம்.
செய்ய தேவையான பொருட்கள்
- 6 இட்லி
- பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
- 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 3 பச்சை மிளகாயை
- 1 துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 1/2 பெரிய வெங்காயம்
- 1/2 குடைமிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 6 தேக்கரண்டி தக்காளி சாஸ்
- 1 தேக்கரண்டி சோயா சாஸ்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
1. ஆறு இட்லி களையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நீங்கள் மினி இட்லி பயன்படுத்தினால் நறுக்க தேவையில்லை அப்படியே பயன்படுத்தலாம்.
2. சூடான எண்ணெயில் சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு பொரித்துக் கொள்ளவும், அல்லது பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
3. பின்னர் ஒரு கிச்சன் பேப்பரில் தனியே எடுத்து வைக்கவும்.
4. மற்றொரு கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மூன்று பல் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
5. 2 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர் பெரிய வெங்காயத்தை சிறுசிறு சதுரங்களாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் குடைமிளகாயை சிறுசிறு சதுரங்களாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் ஒரு நிமிடத்திற்கு வதக்கிக்கொள்ளவும்.
7. அதனுடன் தேவையான அளவு உப்பு, 6 தேக்கரண்டி தக்காளி சாஸ் மற்றும் ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
8. பின்னர் பொரித்து வைத்துள்ள இட்லியில் பாதி அளவு சேர்த்து கிளறவும்.
9. இட்லி சாஸுடன் நன்கு கலந்த பின்னர் மீதமுள்ள இட்லியை சேர்த்து கிளறவும்.
10. அடுப்பை அணைத்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான சில்லி இட்லி தயார்.