வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம். சிறுதானிய இட்லி, தோசை, பணியாரம், அடை, பொங்கல், பிரியாணி, உப்புமா ஆகியவற்றை செய்யலாம்.
ஆரோக்கியமான வரகு அரிசியில் இட்லி, தோசை ஆகியவற்றை செய்து குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வரகு அரிசியில் இட்லி தோசை நீங்களும் சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
வரகரசி இட்லி மாவு செய்ய தேவையான பொருட்கள்
- 2 கப் வரகு அரிசி
- 1 கப் இட்லி அரிசி
- 3/4 கப் உளுத்தம் பருப்பு
- 1/2 அவல்
- உப்பு தேவையான அளவு
வரகுஅரிசி இட்லி செய்யும் முறை
1. ஒரு பாத்திரத்தில் சிறுதானியம், இட்லிஅரிசி, அவல், ஆகியவற்றை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை உளுந்து சேர்த்து, கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
3. இரண்டையும் குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
4. ஊறிய பின்னர் இட்லிஅரிசி, வரகுஅரிசி, அவல், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. பின்னர் உளுந்தை குறைவான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
6. இரண்டையும் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியான மாவாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
7. அதனை ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும். இரவில் மாவு அரைத்து வைத்து, காலையில் இட்லி சுடும் பொழுது மேலும் சுவையாக இருக்கும்.
8. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும், எண்ணை தடவி இட்லி மாவை ஊற்றி 8 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.
9. தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து தோசைகளை சுட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
10. பஞ்சு போன்ற சிறுதானிய இட்லி மற்றும் மொறுமொறு சிறுதானிய தோசை தயார்.