மோர் குழம்பு மிகவும் வித்தியாசமான மற்றும் சுவையான குழம்பு வகை. மோர் குழம்பு புளித்த தயிர் அல்லது புளித்த மோர் கொண்டு செய்யப்படுகிறது. வெள்ளை பூசணி, வெண்டைக்காய், அல்லது கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம் அல்லது பருப்பு வடை, அல்லது மெது வடை, சேர்த்தும் மோர் குழம்பு செய்யலாம். மோர்க்குழம்பு சூடான சாதம், மற்றும் அடையுடன் சுவையாக இருக்கும்.
மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1 கப் புளித்த தயிர்
வெள்ளை பூசணிக்காய் தேவையான அளவு (தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது ).
உப்பு தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
¼ கப் துருவிய தேங்காய்
1 தேக்கரண்டி கடலை பருப்பு
2 தேக்கரண்டி வரக்கொத்தமல்லி
½ தேக்கரண்டி சீரகம்
3 பச்சை மிளகாய்
சிறிய துண்டு இஞ்சி
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
சில கறிவேப்பிலை இலைகள்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். சூடானதும் நறுக்கி வைத்த பூசணிக்காய் மற்றும் உப்பு சேர்த்து, 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு சீரகம் கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
3. அதனுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
4. துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும்.
5. கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் கரகரப்பாக அரைக்கவும்.
6. ஒரு வாணலியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
7. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
8. பின்னர் வேகவைத்த பூசணிக்காய் அல்லது உங்கள் விருப்பமான காயை சேர்த்து கிளறிவிடவும்.
9. மிக்ஸி ஜாரில் புளித்த தயிர் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் தயிரை கலக்கி எடுக்கவும். தயிர் தற்பொழுது மோர் போல நீர்த் இருப்பதை காணலாம்.
10. மசாலா மற்றும் பூசணிக்காய் கலவையுடன் கலக்கிய மோரில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விடவும்.
11. ஒரு சிறிய வானலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
12. மோர் குழம்புடன் தாளிப்பை சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.