வெங்காய சட்னி வெங்காய சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், மற்றும் அடை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வெங்காய சட்னி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மற்றும் புளி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் இல்லாதவர்கள் பெரிய வெங்காயம் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால்அது இனிப்பு சுவை தரும். உளுத்தம் பருப்புக்கு பதிலாக நீங்கள் கடலைப் பருப்பும் சேர்த்துக்கொள்ளலாம் சுவையான வெங்காய சட்னி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான சட்னி செய்ய சில குறிப்புகள்
- சட்னியைத் தயாரிக்கும் போது உங்கள் சுவைக்கு ஏற்ப காரம் சேர்த்துக்கொள்ளலாம்.
- இட்லி மாவு நன்றாக புளித்திருந்தால் புளியை குறைவாக சேர்த்து கொள்ளலாம்.
- சட்னி தாளிக்கும் போது சிறிதளவு உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்த்து
கொள்ளலாம். - நீங்கள் உளுத்தம் பருப்புக்கு பதிலாக கடலை பருப்பு சேர்த்து கொள்ளலாம்.
- நீங்கள் சட்னியை 3 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன் படுத்தலாம்.
வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- 250 grams சின்ன வெங்காயம்
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 5 பூண்டு பற்கள்
- 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 10 காய்ந்த மிளகாய்
- புளி நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- 2 தேக்கரண்டி எண்ணெய்/நல்லெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
வெங்காய சட்னி செய்முறை
1. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
2. பின்னர் 250 grams சின்ன வெங்காயம், 5 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் அதில் 10 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் நெல்லிக்காய் அளவு புளியை பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
5. நன்கு ஆற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, சட்னியுடன் கலக்கவும்.
7. சூப்பரான வெங்காய சட்னி தயார்.