
பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும். சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் துவையல் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

பீர்க்கங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 1
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5/காரத்திற்கேற்ப
புளி – சிறிய கோலி குண்டு அளவு
தேங்காய் – 4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை – தேவையான அளவு
பீர்க்கங்காய் துவையல் செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

2.அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

3.பின்னர் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.

4.அதனுடன் உப்பு புளி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

5.பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.


6.பீர்க்கங்காய் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும்.

7.பின்னர் கலவையை நன்கு ஆற வைக்கவும்.

8.ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து எடுக்கவும்.

9.அதனுடன் கடுகு கருவேப்பிலை தாளித்து கலந்து சூடான சாதம் அல்லது தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.
