உருளைக்கிழங்கு வருவல் மிகவும் சுவையான ஒரு வகை. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், மற்றும் தயிர்சாதத்துடன் அலாதியான சுவையுடன் இருக்கும். அசத்தலான இந்த உருளைக்கிழங்கு வருவல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதே முறையில் உருளைக்கிழங்கு வருவல் செய்து சுவைத்து மகிழுங்கள்.
உருளைக்கிழங்கு வருவல் செய்ய தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 4
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
மிளகாய் தூள்/சாம்பார் தூள் – ¾ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ¼ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்/சின்ன வெங்காயம் – ½ கப் பொடியாக நறுக்கியது
பூண்டு – 10 / தேவைக்கேற்ப
கடுகு – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை
1.உருளைக்கிழங்கை நன்றாக கழுவி இரண்டாக நறுக்கி பிரஷர் குக்கரில் 1 அல்லது 2 விசில் வைத்து எடுக்கவும்.
2.உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதனை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3.ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்து கலக்கி கொள்ளவும்.
4.அதனுடன் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி எடுத்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
5.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
6.அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
7.அதனுடன் பூண்டு பற்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து மென்மையாக கிளறிவிடவும்.
8.தற்பொழுது மசாலாவில் பிரட்டி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
9.மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடிப்பிடிக்காமல் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
10.சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.