
வாழைக்காய் பொரியல் சாம்பார், ரசம், மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும். வாழைக்காய் பலவிதங்களில் செய்யப்படுகிறது. வாழைக்காய் பொரியல்,வறுவல், எண்ணெய் வாழைக்காய், வாழைக்காய் பொடிமாஸ், போன்று விதவிதமாக செய்யலாம். வாழைக்காயை தண்ணீரில் வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தாளிப்பதுபொதுவான முறையாகும்.வாழைக்காய் பொரியல் தயிர் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.

வாழைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
- வாழைக்காய் – 2
- வெங்காயம் பொடியாக நறுக்கியது – ½ கப்
- தேங்காய்துருவல் – 2 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- பூண்டு பற்கள் – 5
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
வாழைக்காய் பொரியல் செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

2.நன்கு கழுவி, தோல் நீக்கி, பொடிப் பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்க்கவும்.

3.மூடி வைத்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

4.பின்னர் தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

5.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

6.அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் நசுக்கிய பூண்டு, சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

7.அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.

8.அதனுடன் வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறவும்.

9.சில நிமிடங்களுக்குப் பின் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

10.சுவையான வாழைக்காய் பொரியல் தயார். சாம்பார் மற்றும் சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
