See this Recipe in English
கோதுமை பிஸ்கட் இது மிகவும் சுவையானது. அதே நேரத்தில் விரைவாகவும் செய்யக்கூடியது. இதற்கு ஓவென் தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணை, ஆகியவை மட்டும் போதும். சுவையான கோதுமை பிஸ்கட் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான கோதுமை பிஸ்கட் செய்ய சில குறிப்புகள்
- சர்க்கரை சேர்க்கும் பொழுது நாட்டுச்சர்க்கரை அல்லது organic சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தலாம், எந்த வகை சர்க்கரை பயன்படுத்தினாலும் நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- வெண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் அதே அளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெண்ணை சேர்க்கும் பொழுது, மென்மையான வெண்ணை பயன்படுத்தவும், பிரிட்ஜில் இருந்து எடுத்த உடன் அழுத்தமாக இருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டாம், சிறிது நேரம் வெளியில் வைத்து பின்னர் பயன்படுத்தவும்.
- மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும், விரிசல் விழும் அளவிற்கு கட்டியாகவோ அல்லது வழுவழுப்பாக இருக்க கூடாது.
- குகி கட்டர் அல்லது பாட்டில் மூடி பயன்படுத்தி பிஸ்கட்டுகளை வெட்டிக் கொள்ளலாம் அல்லது ஒரு சிறிய கத்தி வைத்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளலாம்.
- எல்லா பிஸ்கட்டுகளையும் தயாராக வைத்த பிறகு எண்ணெயில் பொரிக்கவும், எண்ணெய் காய்ந்த பிறகு பிஸ்கட்டுகளை நறுக்க வேண்டாம்.
- பொரிக்கும் போது மிதமான சூட்டில் வைத்து பொரிக்கவும், நுரை ஓரளவுக்கு அடங்கி பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
- பிஸ்கட் எடுக்கும்பொழுது மென்மையாக இருக்கும் ஆறியபிறகு கரகரப்பாக இருக்கும்.
- இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்
- பிஸ்கட் செய்வதற்கு கோதுமைக்கு பதிலாக நீங்கள் மைதாபயன்படுத்தலாம், அதுவும் சுவையாக இருக்கும்.
See this Recipe in English
கோதுமை பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1/2 கப் பொடித்த சர்க்கரை
- 2 தேக்கரண்டி வெண்ணெய்
- சிட்டிகை உப்பு
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு அகலமான பௌலில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் அரை கப் நன்றாகப் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
4. 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.
5. இப்பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
6. நன்கு பிசைந்த பின்னர், மூடிவைத்து 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.
7. 15 நிமிடங்களுக்கு பின்னர், மேடையில் சிறிதளவு கோதுமை மாவு தூவி நாம் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து, ஓரளவு திக்காக விரித்துக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒரு குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடி கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
9. மீதமுள்ள மாவை தனியே பிரித்து மீண்டும் அதே போல் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
10. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பத்து பதினைந்து பிஸ்கட்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
11. எண்ணையில் போட்ட பின்னர் கிளறிவிடவும், எல்லா பக்கமும் சமமாக வெந்து வரும்.
12.மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பொரிக்கவும்
13. நுரை ஓரளவுக்கு குறைந்து பொன்னிறமானதும், எண்ணெய் வடித்து விட்டு தனியே எடுக்கவும், இதேபோல எல்லா பிஸ்கட் களையும் பொரித்துக் கொள்ளவும்.
14. சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.