Mysore Dosa in Tamil | மைசூர் தோசை | Spicy Mysore Dosa in Tamil

See this Recipe in English

மைசூர் தோசை கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மிகவும் பிரபலமான தோசை வகை.   மைசூர் தோசை காரசாரமான சுவை கொண்டது. பூண்டு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு மசாலா அரைத்து , தோசையை மெலிதாக, பொன் நிறமாக, ஊற்றி எடுத்து அதனுள் அரைத்த மசாலாவை வைத்து செய்வதால் மைசூர் தோசை சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

மைசூர் மசாலா தோசை என்பது  உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆகியவற்றை வைத்து அதனுடன் காரச் சட்னி சேர்த்து தடவி செய்யப்படும் தோசை வகை. இது சாதாரண மசாலா தோசை இருந்து வேறுபட்டது.

தோசை மாவு செய்முறை

  • தோசை மாவு செய்வதற்கு 4 பங்கு இட்லி அரிசிக்கு, 1 பங்கு உளுத்தம்பருப்பு,  1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும்   சிறிதளவு அவல் ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து மென்மையாக அரைத்து,  8 மணி நேரம் புளிக்க வைத்து பயன்படுத்தவும்.
  • முழுவதுமாக இட்லி அரிசி பயன்படுத்தாமல் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றை சம அளவு பயன்படுத்தினால் தோசை பொன் நிறமாக இருக்கும்.
  • சிறிதளவு கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் தோசை சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.
  • மாவு அரைக்கும் போது ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைத்தால் மாவு சூடாவதை தடுக்கும். 
  • தோசை மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் அதே சமயத்தில் நீர்த்து இல்லாமல் மிதமாக அரைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணெய் சேர்த்து தோசை சுட்டால் அதிக நேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

சுவையான மைசூர் தோசை செய்ய சில குறிப்புகள்

  • பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • மசாலா அரைக்கும் பொழுது குறைவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • தோசை ஓரளவு வெந்த பின்னர் மசாலா தடவும், விவாதம் மாவில் மசாலா தடவினால் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது 
  • மசாலா தடவிய பின்னர் இரண்டு நிமிடங்களுக்கு மேல் வேகவைக்க வேண்டாம், தோசை கரிந்து விடும் வாய்ப்புள்ளது.

இதர வகைகள்

சில்லி மசாலா இட்லி

கத்திரிக்காய் சட்னி

மெது பக்கோடா

செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்

ராகி புட்டு

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி

 ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை இட்லி பொடி

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • சமையல் எண்ணெய் – 2  தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 10 – 15 ( காரத்திற்கு ஏற்ப)
  • சின்ன வெங்காயம் – 15
  • பூண்டு பற்கள் – 15
  • உப்பு –   தேவையான அளவு

இதர  பொருட்கள்

  • தோசை மாவு –  தேவையான அளவு
  • நல்லெண்ணெய் –  தேவையான அளவு

செய்முறை

1. ஒரு கடாயில் 2  தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு மற்றும் தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

2. கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் வறுபட்ட பின்னர்  சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் பூண்டு பற்கள் சேர்க்கவும். 

3. பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

4. பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் ஜாரில் சேர்க்கவும்,  அதனுடன் தேவை தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

5. தோசை கல்லில் மெலிசாக தோசை வார்த்து கொள்ளவும்,  தேவையான எண்ணெய் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

6. பின்னர்  தேவையான அளவு மசாலாவை தடவிக் கொள்ளவும். 

7. மேலும் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.

8. மைசூர் தோசை தயார், தேங்காய் சட்னி சாம்பாருடன் சுவையாக இருக்கும்.

Leave a Reply