தட்டை / தட்டை முறுக்கு தீபாவளி மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யக்கூடிய ஒரு சுவையான மொறுமொறுப்பான உணவு வகை. அது தவிர மாலை நேர சிற்றுண்டி ஆகும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
தட்டை அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப்பருப்பு, மிளகாய் தூள், மற்றும் எள் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இவற்றை சரியான முறையில் கலந்து முறுமுறுப்பாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் தட்டை தயார். சுவையான தட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தட்டை செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி மாவு
- 4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 4 தேக்கரண்டி பொட்டுகடலை
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி வெள்ளை/கறுப்பு எள்
- 2 தேக்கரண்டி கடலை பருப்பு
- 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
தட்டை செய்முறை
1. கடலை பருப்பு 30 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், மற்றும் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியை சூடாக்கி அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
3. பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பொட்டுக்கடலை சேர்க்கவும்.
4. உளுத்தம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலையை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெள்ளை/ கருப்பு எள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும் .
6. அதனுடன் அரைத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்க்கவும்.
7. அதனுடன் ஊறவைத்த கடலைப் பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் 2 தேக்கரண்டி சூடான எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
9. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
10. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
11. ஒரு காட்டன் துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து நைசாக தட்டிக் கொள்ளவும்.
12. பின்னர் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி, தட்டைகளை பொரிக்கவும்.
13. இருபுறமும் பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து விட்டு எடுக்கவும். சுவையான மொறுமொறுப்பான தட்டை தயார்.