Thinai Payasam in Tamil | தினை பாயசம் | சிறுதானிய பாயசம் | Foxtail Millet Payasam Recipe

சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு,  கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை,  சிறுதானிய பணியாரம், சிறுதானியக் கஞ்சி, ஆகியவை மிகவும் பிரபலம்.

தினை பாயசம் பருப்பு பாயசம் செய்வது போலவே சிறுதானியத்தில் வெல்லம், பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து செய்யலாம். சிறுதானிய பாயசம் செய்யும்போது மேலும் ஆரோக்கியமாக்க கருப்பட்டி வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியம் நிறைந்த தினை அரிசி பாயசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தினைப் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • 1/4  கப் தினை
  • 1/4  கப் பாசிப்பருப்பு
  • 1/2  கப் வெல்லம்
  • 1 கப் பால்
  • 3 தேக்கரண்டி  நெய்
  • 10 முந்திரிப் பருப்புகள்
  • 10 காய்ந்த திராட்சை
  • 1/4  தேக்கரண்டி ஏலக்காய் பொடி

சிறுதானிய பாயாசம் செய்முறை

1. ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும்,  பாசிப் பருப்பை அலசி விட்டு சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதனுடன் நன்றாக கழுவிய திணை அரிசியை சேர்த்துக் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

3. பின்னர் 2 கப் அளவு தண்ணீர்  சேர்க்கவும்.

4. பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

5. பிரஷர் ரிலீஸானதும் குக்கரை திறந்து தினை அரிசி, பருப்பு கலவையை லேசாக மசித்து விடவும்.

6. அதனுடன் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.

7. வெல்லம் கரையும் வரை மிதமான சூட்டில் கிளறி விடவும்.

8. வெல்லம் கரைந்ததும் காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.  ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

9. சிறிய வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி பருப்பு மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயசத்துடன் சேர்த்து கலக்கவும்.

10. சூப்பரான சிறுதானிய பாயசம் தயார்.  

Leave a Reply