Idiyappam | இடியாப்பம் | How to make Idiyappam | Idiyappam recipe

இடியாப்பம் ஆவியில் வேக வைத்து செய்யப்படும் ஒரு சுவையான உணவு வகை. இட்லி போன்று இதுவும் ஆரோக்கியமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இடியாப்பம் பலவிதமாக செய்யப்படுகிறது, பச்சரிசி மாவில் இடியாப்பம் செய்யலாம் அது சேவை என்றும் கூறப்படுகிறது. இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் இடியாப்பம் செய்யலாம் .இது அரிசியை ஊறவைத்து, மாவு அரைத்து, மாவை வேக வைத்து பின்னர் செய்ய வேண்டும்.   பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி ஆகியவற்றில் செய்யும் பொழுது  இரண்டும் வெவ்வேறு சுவைகளில் இருக்கும்.

சுவையான இடியாப்பம் செய்ய சில குறிப்புகள்

  1. இடியாப்பம் செய்வதற்கு கீழே குறிப்பிட்டுள்ள செய்முறை புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி இரண்டும் பயன்படுத்தலாம்.
  2.  அரிசியை நன்கு கழுவி விட்டு அதற்கு பின்னர் ஊற வைக்கவும்.
  3. மாவு அரைக்கும்போது நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. கொரகொரப்பாக அரைத்தால் இடியாப்பம் மென்மையாக இருக்காது, சில சமயங்களில் சேவை அச்சில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
  5. பாத்திரத்தில் ஊற்றி கிளறும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தவும்.  நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தவில்லை என்றால் கடாயில் சிறிதளவு நெய் தடவி பயன்படுத்தவும்.
  6. இதனை நீங்கள் தேங்காய் பால் மற்றும் வெல்லப்பாகு உடன் பரிமாறலாம் அல்லது துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை கலந்து அதனுடன் பரிமாறலாம்.
  7. இடியாப்பத்தை உதிர்த்து விட்டு எலுமிச்சை சாதம் செய்வதற்கு தாளிப்பது போல் தாளித்து கார இடியாப்பம் செய்யலாம்.

இதர பாரம்பரிய உணவுகள் –  ராகி புட்டுதயிர் வடை, பருப்பு போளி, மெதுவடை, பால் கொழுக்கட்டை, காராமணி குழம்பு, மசாலா வேர்க்கடலை, சக்கரை பொங்கல், புளி சாதம், முருங்கைக் கீரை கூட்டு, வாழைக்காய் பொரியல், தக்காளி ரசம், எலுமிச்சை சாதம், சேப்பங்கிழங்கு வறுவல்

 

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி  
  • உப்பு தேவையான அளவு
  • 1 தேக்கரண்டி எண்ணெய் 

செய்முறை

 1. இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசியை கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும். 

2. அரிசி ஊறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில்  அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீருடன் சேர்த்து கொள்ளவும்.

4. இப்பொழுது நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் மாவை ஊற்றி குறைவான தீயில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு கிளறவும். மாவு கெட்டியாக இருந்தால் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

6. பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

 7. இப்பொழுது கையால் ஒரு முறை பிசைந்து கொள்ளவும்.

 8. அதனை இடியப்ப உரலில் வைக்குமளவிற்கு உருட்டிக் கொள்ளவும்.

 9. ஒரு இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டில் நெய் தடவி அதன்மேல் உருண்டைகளை வைக்கவும்.

10. இப்பொழுது 10 முதல் 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.

11.  இடியப்ப உரலில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும் அதனுள் சேவை அச்சை வைத்துக்கொள்ளவும்.

 12. இப்பொழுது தயாராக உள்ள  மாவு உருண்டைகள் ஒன்றை உள்ளே வைக்கவும். மூடிவைத்து  வாழை இலை அல்லது ஒரு பிளேட்டில் நேரடியாக பிழியவும்.

13. சுவையான இடியாப்பம் தயார்.

 

Leave a Reply