அசோகா அல்வா | Ashoka Halwa in Tamil

அசோகா அல்வா பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும்  திருவையாறு மிகவும் புகழ்பெற்றது.  மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இது மிகவும் சுலபமாக செய்யலாம். அதேநேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும். அல்வா என்றால் பொதுவாக திருநெல்வேலி அல்வா நினைவில் வரும் . 

 

இந்தியா முழுவதும் பலவிதமான அல்வா வகைகள் செய்யப்படுகிறது இந்தியா தவிர உலக அளவிலும் அல்வா மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம், இந்தியாவை  பொருத்தவரை வடஇந்தியாவில் ரவா கொண்டு செய்யக்கூடிய சுஜி அல்வா மிகவும் புகழ்பெற்றது, அது தவிர அங்கு கேரட் அல்வா மிகவும் பிரபலம். முந்திரி அல்வா மற்றும் பாதாம் அல்வா போன்றவை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்றது.  காசி அல்வா எனப்படும் பூசணிக்காய் அல்வா கர்நாடகாவின் புகழ்பெற்ற அல்வா வகை.

திருநெல்வேலி கோதுமை அல்வா சம்பா கோதுமை கொண்டு செய்யப்படுகிறது. இதன் தனி சுவைக்கு காரணம் அது தாமிரபரணி தண்ணீரில் செய்வதால் என கூறப்படுகிறது. பாசிப்பருப்பு அல்வா திருநெல்வேலி அல்வா போன்று அதிக நெய் மற்றும் சர்க்கரை கொண்டு செய்வதில்லை ஆனால் மிக மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான அல்வா.

சுவையான அசோகா அல்வா செய்ய சில குறிப்புகள்

  • பாசிப்பருப்பு அல்வா செய்யும் பொழுது பாசிப்பருப்பை நல்ல வாசனை வரும் வரை வறுத்து பின்னர் செய்யவும் வறுக்காமல் நேரடியாக வேகவைத்து செய்யும்பொழுது சில சமயங்களில் பாசிப்பருப்பில் பச்சை வாசனை வருவதற்கு வாய்ப்புள்ளது.
  • சர்க்கரை சேர்க்கும் பொழுது உங்கள் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் விருப்பப்பட்டால் ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது  கலர் சேர்க்காமலும் செய்யலாம், அல்லது ஒரு சிட்டிகை குங்குமப் பூவை 4 தேக்கரண்டி பாலில் ஊற வைத்து அதனை சேர்த்துக்கொண்டால் இயற்கையான ஆரஞ்சு நிறம் கிடைக்கும்.
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நெய் சேர்த்துக் கொள்ளலாம் அதிக நெய் சேர்க்கும்போது அதிக சுவையுடன் இருக்கும்.
  • கோதுமை மாவு சேர்க்காமலும் நீங்கள் அசோகா அல்வா செய்யலாம். 

அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்பு (200 grams)
  • 2 கப் சர்க்கரை (400 grams)
  • 3/4 கப் நெய்
  • 10 முந்திரிப்பருப்பு
  • 4 தேக்கரண்டி கோதுமை மாவு
  • 1 சிட்டிகை ஆரஞ்சு நிறம்
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்

அசோகா அல்வா செய்முறை

1. ஒரு பிரஷர் குக்கர் அல்லது வாணலியை சூடாக்கவும் பின்னர் 1 கப் பாசிப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

2. நிறம் மாறாமல் அதே சமயம் நல்ல மணம் வரும் வரை 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

3. பின்னர் 3 முதல் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

4. இப்பொழுது 3 விசில் வைத்து வேக வைக்கவும் அல்லது பாசிப்பருப்பு மசியும் வரை வேக வைக்கவும்.

5. பாசிப்பருப்பு குழைவாக வெந்த பின்னர் அதனை ஆற வைக்கவும்.

 6. பாசிப்பருப்பு ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

7. ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்கவும், சூடானதும் 10 முந்திரி பருப்புகளை பாதியாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

8. பொன்னிறமாகும் வரை வறுக்கவும் பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும்.

9. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்,

10. அதில் 4 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும் அல்லது நல்ல மணம் வரும் வரை  வறுக்கவும்.

11. அதனுடன் வேக வைத்து அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும்.

12. பின்னர் 2 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

13. சர்க்கரை கரையும் வரை கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

14. சர்க்கரை கரைந்த பின்னர் 4 தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.

15. அல்வா கெட்டியாக ஆரம்பித்ததும் ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறத்தை இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

 16. கேசரி கலர் நன்கு கலக்கும் வரை கிளறவும்.

17. மீதமுள்ள நெய்யை சேர்த்து கலக்கவும்.

18. இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

 19. அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடலாம்.

20. சுவையான அசோகா அல்வா தயார். 

Leave a Reply