பாதாம் பால் | Badam Milk recipe in tamil | Badam kheer

பாதாம் பால் சுவையான கிரீமியான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பாதாமை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை.  இது எல்லா விதமான விசேஷங்களுக்கும் சிறப்பு சேர்க்கும், இது திருமண விழாக்கள் மற்றும்  சுப நிகழ்ச்சிகளளுக்கும் ஏற்றதாகும். பாதாம் பால் பாதாம், சர்க்கரை, குங்குமப்பூ, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை சூடாக அல்லது குளிர்ச்சியாக பரிமாறலாம்.  சுவையான பாதாம் பால் நீங்களும் வீட்டிலே சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

இந்தியாவில் பலவிதமான பாயசம் மற்றும் பால் வகைகள் இருக்கிறது. குறிப்பாக ஜவ்வரிசி பாயசம், பால் பாயசம், போன்றவை மிகவும் புகழ்பெற்றது. அது தவிர வட இந்தியாவில் கேரட் பாயசம், கோதுமை பாயசம், போன்றவை மிகப் புகழ் பெற்றவை. பாதாம் பாயாசம் அல்லது பாதாம் கீர், பாதாம் பாலில் இருந்து வேறுபட்டது. பாதாம் கீர் சர்க்கரை சற்று கூடுதலாக இருக்கும். பாதாம் பால் சர்க்கரை குறைவாக இருக்கும். அதே சமயம் சூடாக காபி, டீ போன்று பரிமாறலாம், மாலை நேரங்களில் புத்துணர்ச்சியாக அதனை பருகலாம். பாதாம்கீர் இனிப்பு வகையாக பாயசம் போன்று  விருந்து உணவு வகைகளுடன் விசேஷங்களில் பரிமாறப்படுகிறது. 

சுவையான பாதாம் பால் செய்ய சில குறிப்புகள்

  • பாதாம் பால் செய்யும் பொழுது பாதாமை சூடான தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து பயன்படுத்தவும். தோல் உரிக்காமல் பயன்படுத்தினால் சில சமயங்களில் லேசான கசப்புச் சுவைக்கு வாய்ப்பிருக்கிறது.
  • நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • பாதாம்உடன் சேர்த்து முந்திரி, பிஸ்தா போன்றவற்றையும் அரைத்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
  • பாதாம் பாலை சூடாக பரிமாறலாம் அல்லது 2-3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து சில்லென பரிமாறலாம்.
  • நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

பாதாம் பால் செய்ய தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பாதாம் (100 grams)
  • 1/2 கப் சர்க்கரை (150 grams)
  • 1/2 லிட்டர் பால் (500 ml)
  • சிறிதளவு குங்குமப்பூ
  • 1/2 கப் பால் (பாதாம் அரைப்பதற்கு மற்றும் குங்குமப்பூ பால் செய்வதற்கு)
  • 10 பிஸ்தா 5 பாதாம் 
  • 5 பாதாம்

பாதாம் பால் செய்முறை

1. ஒரு  பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை சூடாக்கவும்.  நன்கு சூடானதும் பாதாமை சேர்த்து, 2 -3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 

2. பின்னர் ஒரு வடிகட்டியில்  பாதாமை வடிகட்டவும், குளிர்ந்த நீரில் பாதாமை கழுவி உள்ளங்கையில் வைத்து அழுத்தவும்.

3. இப்பொழுது சுலபமாக தோல் நீக்கி விடலாம்.

4. தோல் நீக்கிய பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து,  1/4 கப் பால் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

5. பின்னர்  1/2 லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு காய்ச்சவும். 

6. அரைத்த பாதாம்  விழுதை பாலுடன் சேர்க்கவும்.

7. பாதாம் நன்கு வெந்ததும் அதனுடன் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும்.

8. சர்க்கரை கரைந்து கலந்தபின், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து 1/4 கப் பாலை கலக்கவும்.

9.பொடித்த பிஸ்தா பாதாம் சேர்த்து கலக்கவும்.

10. இரண்டு நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது ஆற வைத்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

Leave a Reply