Gravy Base in Tamil | கிரேவி பேஸ் | Curry Base Recipe | How to make Gravy Base

கிரேவி பேஸ் என்பது வெங்காயம் மற்றும் தக்காளியை பயன்படுத்தி வித விதமான கிரேவி செய்வதற்கு அடிப்படையாக செய்யும் மசாலா. இதுபோல மசாலா செய்து வைத்துக் கொண்டால்,  விதவிதமான கிரேவி வகைகளை வீட்டிலேயே சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவாக செய்யலாம்.

கிரேவி பேஸ் மசாலா வைத்து பன்னீர் கிரேவி,  உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி,  சென்னா மசாலா,  காய்கறி குருமா,  உருளைக்கிழங்கு குருமா,  காலிபிளவர் மசாலா,  கோஃப்தா கறி,  போன்ற பலவிதமான சைவ உணவுகளை செய்யலாம் சப்பாத்தி,  பரோட்டா,  நான்,  இட்லி,  தோசை என விதவிதமான டிபன் அயிட்டங்களுடன் நாம் செய்து பரிமாறலாம்.

சைவ குருமா வகைகள் தவிர  முட்டை குருமா,  உடைத்து ஊற்றிய முட்டை மசாலா,  சிக்கன் கிரேவி,  மட்டன் மசாலா,   போன்ற அசைவ குருமா வகைகள் செய்யவும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  இது தவிர காய்கறிகளை வேக வைத்து இந்த மசாலாவில் சிறிதளவு சேர்த்து பிரட் சாண்ட்விச்,  சமோசா ஸ்டஃபிங்,  போன்றவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  வேகவைத்த பாஸ்தாவுடன் சிறிதளவு வெங்காயம் தக்காளி மசாலா சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால் உடனடி மசாலா பாஸ்தா தயார்.

சுவையான கிரேவி பேஸ் செய்ய சில குறிப்புகள்

  • கிரேவி பேஸ் செய்வதற்கு சமையல் எண்ணெய் பயன்படுத்தும் பொழுது சற்று கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளவும் அப்பொழுதுதான் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்ப்பதற்கு பதிலாக குழம்பு மிளகாய்த்தூள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  சாம்பார் தூள் பயன்படுத்த வேண்டாம்.
  • இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது இரண்டையும்  தோல் நீக்கிய பின்னர் 100 கிராம் இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும்.
  • கிரேவி பேஸ் தயார் செய்த பின்னர் அதனை நன்றாக ஆறவிட்டு ஒரு சுத்தமான டப்பாவில் போட்டு மூடி வைக்கவும் வெளியில் வைப்பதாக இருந்தால் 2 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்,  அதனால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
  • விருப்பப்பட்டால் அதனை சிறிய கவரில் பிரித்து வைத்து ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கிரேவி பேஸ் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
  • தக்காளி பயன்படுத்தும் பொழுது நன்றாக பழுத்த தக்காளி பழங்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

முட்டை மசாலா

சோயா குருமா 

பன்னீர் கிரேவி

முட்டை குழம்பு

பன்னீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்

  • சமையல் எண்ணெய் – 200 ml
  • வெங்காயம் –  1  கிலோ 
  • தக்காளி – 1  கிலோ
  • மஞ்சள் தூள் – 1  தேக்கரண்டி
  • தனி மிளகாய் தூள் – 4  தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 8  தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1  தேக்கரண்டி
  • இஞ்சி – 50 g
  • பூண்டு – 50 g
  • உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • கிராம்பு – 10
  • ஏலக்காய் – 10
  • மராத்தி மொக்கு – ½
  • ஜாதிக்காய் – ½
  • அன்னாசிப்பூ – 2
  • கல்பாசி –  சிறிதளவு
  • பட்டை – 1  பெரிய துண்டு
  • பிரிஞ்சி இலை – 3

செய்முறை

1. வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றும் 1 கிலோ வீதம் அளந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் 1 கிலோவை விட சற்று கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம் தோல் நீக்கும் பொழுது சரியாக இருக்கும்.

2. வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பானில் 200ml சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

6. எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள ஒரு கிலோ வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

7. மிதமான தீயில் வைத்து வதக்கவும் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

8. பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

9. இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை அல்லது 10 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும்.

10. பின்னர் ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள்,  4 தேக்கரண்டி தனி மிளகாய் தூள்,  8 தேக்கரண்டி மல்லித்தூள் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

11. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்துக் கொள்ளவும். 

12. அதனுடன் 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளவும் 

13. மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

14. பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்.

15. குறைவான தீயில் வைத்து கிளறவும் நன்றாக கலந்த பின்னர் மூடி வைத்து குறைவான தீயிலேயே வேக வைக்கவும்.

16. 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும் அப்போது கிளறி விடவும்.

17. தக்காளி தொக்கு பாதியாக குறைந்து சமையல் எண்ணெய் பிரிந்து மேலே மிதந்தால் அடுப்பை அணைத்து விடவும்.

18. நன்றாக ஆரிய பின்னர் சுத்தமான டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைக்கவும்.

Leave a Reply