Paneer Gravy in Tamil | பன்னீர் கிரேவி | Paneer Masala Gravy | Paneer Curry

See this Recipe in English

பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நான், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும்.

 சுவையான பன்னீர் கிரேவி செய்ய சில குறிப்புகள்

  1. பன்னீர் கிரேவி செய்வதற்கு கடையில் வாங்கிய அல்லது வீட்டில் செய்த பன்னீர் பயன்படுத்தலாம்.
  2. வீட்டில் செய்த பன்னீர் கடையில் வாங்கும் பன்னீரை விட மென்மையாக இருக்கும்.
  3. இந்த கிரேவியை தாளிப்பதற்கு  வெண்ணை பயன்படுத்தவும் பன்னீர் மற்றும் வெண்ணை சேரும்போது சுவை கூடுதலாக இருக்கும்.
  4. முந்திரிப்பருப்பு மற்றும் கசகசா சேர்த்து அரைத்து ஊற்றுவது முற்றிலும் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  5. முந்திரி பருப்பை அரைத்து பயன்படுத்துவதற்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி பிரஷ் கிரீம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  6. நீங்கள் பிரஷ் கிரீம் பயன்படுத்தினால் கடைசியாக சேர்த்துக் கொள்ளவும்.
  7. கஸ்தூரி மேத்தி சேர்க்கும்போது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  8. சீரகப் பொடி சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது சீரகப்பொடி சேர்க்காமலும் செய்யலாம். 

இதர வகைகள் – கத்திரிக்காய் கிரேவி, சோயா குருமா, செட்டிநாடு சிக்கன் குழம்பு,  முட்டை மசாலா, பன்னீர் பட்டர் மசாலா,  சால்னா,  வெஜிடபிள் சால்னா, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு, ஹோட்டல் ஸ்டைல் சால்னா,  ரோட்டுக்கடை காளான் மசாலா

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பனீர்
  • 3  தேக்கரண்டி வெண்ணெய்
  • ½  தேக்கரண்டி சீரகம் 
  • 1 சிறிய துண்டு பட்டை 
  • 3  ஏலக்காய்
  • 3  லவங்கம் 
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 ½  தேக்கரண்டி மிளகாய் தூள்
  • ½  தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 
  • 1  தேக்கரண்டி மல்லித்தூள்
  • ½ தேக்கரண்டி கரம் மசாலா 
  • 1  பெரிய தக்காளி விழுதாக அரைத்து
  • ½  தேக்கரண்டி சர்க்கரை
  • ½  தேக்கரண்டி சீரகத்தூள் 
  • 1 தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி 
  • தேவையான அளவு உப்பு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு 

அரைக்க தேவையான பொருட்கள்

  • 3 தேக்கரண்டி முந்திரி பருப்பு
  • ½  தேக்கரண்டி கசகசா

செய்முறை 

1. ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. வெண்ணெய் உருகியதும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

 3. சீரகம்  பொரிந்த பிறகு ஒரு சிறிய துண்டு பட்டை, 3 ஏலக்காய், மற்றும் 3 லவங்கம் சேர்த்துக் கொள்ளவும்.

4. ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

5. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

6. நன்கு வதங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

 7. அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. இப்பொழுது ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

9. ஒரு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

10. ஓரளவு வதங்கிய பின்னர் மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

11. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் அரை தேக்கரண்டி சீரகப்பொடி சேர்த்துக் கொள்ளவும்.

12. ஒரு மிக்ஸி ஜாரில் 3 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு மற்றும் அரைத் தேக்கரண்டி கசகசா சேர்த்துக் கொள்ளவும் . சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

13. முந்திரிபருப்பு விழுதை பன்னீர் கிரேவியில் சேர்த்து கலக்கவும். 

14. நன்கு கலந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரை சேர்த்துக் கொள்ளவும்.

15. மீண்டும் ஒருமுறை கிளறி ஒரு தேக்கரண்டி  கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ளவும்.

16. மூடி வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

17. இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

18. சுவையான பன்னீர் கிரேவி தயார்.

 

 

Leave a Reply