
கருவேப்பிலை துவையல்/ கருவேப்பிலை சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கருவேப்பிலை துவையல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கருவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கருவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும்.

கருவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – 1 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வர மிளகாய் – 5/6
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்/ நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை துவையல் செய்முறை
1.வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

2.பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

3.அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

4.பின்னர் நன்கு கழுவிய கருவேப்பிலையை சேர்த்து வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.


5.சிறிய துண்டு புளி கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

6.ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.


7.ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.
