Instant Vadai in Tamil | உடனடி மெதுவடை | Rice vada recipe | How to make vadai

மெதுவடை செய்வதற்கு பொதுவாக உளுந்து ஊற வைத்து அரைத்து பின்னர் செய்ய வேண்டும். அது தவிர பருப்பு வடை/மசால் வடை செய்வதற்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து அதற்கு பின்னால் செய்ய வேண்டும். இந்த உடனடி மெதுவடை செய்வதற்கு உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டிய அவசியமில்லை. அரிசி மாவு இருந்தால் போதும் பத்து-பதினைந்து நிமிடங்களில் சுவையான மெதுவடை சுலபமான முறையில் செய்யலாம்.

சுவையான உடனடி மெதுவடை செய்ய சில குறிப்புகள்

1. பதப்படுத்தப்பட்ட மாவு தேவையில்லை சாதாரண அரிசி மாவு அல்லது கடைகளில் விற்கும் அரிசி மாவு பயன்படுத்தலாம்.

2. இடியாப்பம் மாவு போன்று பதப்படுத்தப்பட்ட மாவு இருந்தால் வறுத்த பின்பு பயன்படுத்தவும்.

3. விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடித்த மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

4. மாவு கிளறும் பொழுது பாத்திரத்தில்  ஒட்டினால் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்.

5. வடைக்கு மாவு தயார் செய்யும்பொழுது உங்கள் காரத்திற்கேற்ப பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளவும்,  அல்லது பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகை இடித்து சேர்த்துக் கொள்ளலாம்.

6. வடைகளை தட்டும் பொழுது சிறிது சிறிதாக மெலிதாக தட்டிக் கொள்ளவும்.

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி,  சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ்.

 

 

 தேவையான பொருட்கள்

  •  அரிசி மாவு – 1 கப்
  •  தயிர்  – 1 கப்
  •  தண்ணீர்  – 1 கப்
  •  உப்பு  – தேவையான அளவு
  •  சீரகம் – 1/2 தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 2
  •  வெங்காயம்  – பொடியாக நறுக்கியது சிறிதளவு
  •  கொத்தமல்லி இலைகள்  – பொடியாக நறுக்கியது சிறிதளவு
  •  எண்ணெய்  – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் (மாவு கலக்கும் வரை அடுப்பை பற்ற வைக்க தேவையில்லை)  அதில் 1 கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

3. பின்னர் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும்.

 

4. அதனுடன் தேவையான அளவு உப்பு,  அரை தேக்கரண்டி சீரகம்,  இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,  சிறிதளவு வெங்காயம் பொடியாக நறுக்கியது,  ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

5. பின்னர் அடுப்பை பற்ற வைக்கவும்.

6. மிதமான தீயில் வைத்து கலக்கவும்.

7. மாவு வெந்து நன்றாக திரண்டு வரும் வரை கிளறவும்.

8. அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

9. இப்பொழுது மாவு தயாராக உள்ளது இதனை ஆற வைக்கவும்.

10. ஆறிய பின்னர் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 

11. லேசாக தட்டி மெதுவடை செய்வது போல நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளவும்.

12. இதே போல எல்லா மாவிலும் செய்த பின்னர்  ஒவ்வொரு வடையாக எண்ணெயில் போடவும்.

13. மிதமான தீயில் வேக வைக்கவும்.

 14. ஓரளவு சிவந்த பின்னர் திருப்பி போடவும்.

15. பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே வைக்கவும். சுவையான உடனடி வடை தயார்.

 

Leave a Reply