சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு, உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா. வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து செய்யப்படுவது உருளைக்கிழங்கு சமோசா,காரசாரமாக மற்றும் மொறுமொறுப்பாக இருக்கும். வேகவைத்த உருளைக்கிழங்குடன் கேரட், பட்டாணி, பீன்ஸ், மற்றும் உப்பு, காரம் சேர்த்து மசாலா செய்து அதனை நிரப்பி செய்யப்படும் சமோசா காய்கறி சமோசா. இது பஞ்சாபி சமோசா என்றும் அழைக்கப்படுகிறது. இது வெங்காய சமோசா போல் அல்லாமல் மிருதுவாக இருக்கும்.இது கொத்தமல்லி அல்லது புதினா சட்னி அல்லது டொமேட்டோ சாஸ் உடன் சுவையாக இருக்கும்.
சமோசாவில் நமக்கு பிடித்தவற்றை உள்ளே வைத்து சுவையான விதவிதமான சமோசா செய்யலாம், காய்கறிகளை வைத்து செய்தால் காய்கறி சமோசா. வெங்காயம் வைத்து செய்யும் வெங்காய சமோசா. உருளைக்கிழங்கு கொண்டு உருளைக்கிழங்கு சமோசா செய்யலாம். பன்னீர் மசாலா தூவி வேக வைத்து பனீர் சமோசா செய்யலாம். வேகவைத்த முட்டையை பொடியாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து அதனை உள் வைத்து முட்டை சமோசா செய்யலாம். அதேபோல சிக்கன் கைமாவில் உப்பு, காரம், சேர்த்து வாணலியில் பிரட்டி எடுத்து உள்ளே வைத்து சிக்கன் சமோசா செய்யலாம்.
சுவையான சமோசா செய்ய சில குறிப்புகள்
- சமோசா செய்யும் பொழுது மேல் மாவு செய்ய 1 கப் மைதா & 1 கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- வெங்காய சமோசா வில் நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு கேரட், பீன்ஸ், போன்றவற்றை துருவி சேர்த்துக் கொள்ளலாம். அது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- குழந்தைகளுக்கு சமோசா செய்யும் போது பச்சை மிளகாயை தவிர்த்துவிட்டு செய்யலாம்.
வெங்காய சமோசா செய்ய தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி சூடான எண்ணெய்
- 4 தேக்கரண்டி மைதா ஒட்டுவதற்கு
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
சமோசா ஸ்டப் செய்வதற்கு (stuff) செய்வதற்கு தேவையான பொருட்கள்
- 2 பெரிய வெங்காயம்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல்மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 , 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- இப்பொழுது பிசைந்து வைத்த மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- உருண்டைகளை பூரிக்கட்டை கொண்டு நைசாக தேய்த்து கொள்ளவும்.
- அனைத்து மாவிலும் சமோசா சீட் தயார் செய்துவிட்டு, அதனை சூடான தவாவில் போட்டு இருபுறமும் 5 நொடிகளுக்கு பிரட்டி எடுக்கவும்.
- ஓரங்களை நறுக்கி விட்டு 3 அல்லது 4 செவ்வக வடிவிலான சமோசா சீட்டுகளை நறுக்கிக்கொள்ளவும்.
9. தற்போது சமோசா சீட்களை கோன் வடிவிற்கு மடக்கி அதனுள் தயாராக வைத்துள்ள வெங்காய மசாலாவை நிரப்பி கோனை மூடி மைதா பேஸ்ட் கொண்டு ஒட்டவும்.
10. தயாராக வைத்துள்ள சமோசாக்களை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
11. சுவையான சமோசா தயார்.