பருப்பு பாயசம் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாயசம். இது பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பொதுவாக இது விசேஷ நாட்களில் கடவுளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்களில் பருப்பு பாயசம் செய்வது சிறப்பானதாகும்.
பாயசம் பலவிதமாக செய்யலாம் பால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், போன்றவை. பருப்பு பாயசம் வெல்லம் கொண்டு செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
இதில் மிகவும் சிறப்பானது வெல்லம் சேர்ப்பது. வெல்லத்திற்கு பதிலாக நீங்கள் பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இது தேங்காய் பால் கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் வயிற்றுப்புண் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. தேங்காய்பால் நீங்கள் வீட்டிலும் செய்யலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் தேங்காய்பால் பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் செய்யும் தேங்காய்ப்பால் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. பருப்பு பாயசம் செய்வதற்கு பாசிப்பருப்பு தவிர, துவரம்பருப்பு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சுவையான பருப்பு பாயசம் செய்ய சில குறிப்புகள்
- பாயசம் செய்யும்போது பாசிப்பருப்பு மசியும் அளவுக்கு வேக வைக்கவும், இல்லையேல் பாயசம் சுவையாக இருக்காது.
- வெல்லத்திற்கு பதிலாக நீங்கள் சம அளவு பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
- தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் அதே அளவு பசும்பால் சேர்த்துக்கொள்ளலாம்.
- முந்திரிப்பருப்பு வறுக்கும் பொழுது அதனுடன் சிறிதளவு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.
பருப்பு பாயசம் செய்ய தேவையான பொருட்கள்
- ½ கப் துருவிய தேங்காய்
- 3 தேக்கரண்டி நெய்
- 10 முந்திரி பருப்பு
- 10 காய்ந்த திராட்சை
- 1 கப் வெல்லம்
- 1 கப் பாசிப்பருப்பு
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வடிகட்டியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கையால் அழுத்தி பிழிந்து தேங்காய் பால் எடுக்கவும்.
3. இதேபோல கெட்டியான தேங்காய் பால் எடுத்து தனியே வைக்கவும்.
4. ஒரு சிறிய கடாயில் 3 தேக்கரண்டி நெய் சேர்த்து, அதனுடன் 10 முந்திரி பருப்பு, மற்றும் 10 காய்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.
5. இப்பொழுது துருவிய தேங்காய் சேர்த்து, முந்திரி திராட்சை மற்றும் தேங்காய் ஆகியவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் 1 கப் துருவிய வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
7. வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
பாயசம் செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் 1 கப் பாசிப்பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.
2. அதனுடன் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
3. மூடி வைத்த பாசிப்பருப்பு மசியும் வரை வேக வைக்கவும் அல்லது குக்கரில் 3 விசில் வைக்கவும்.
4. பாசி பருப்பு நன்கு வெந்தபிறகு வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் தயாராக உள்ள தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
6. மேலும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, வறுத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி, திராட்சை, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
7. அடுப்பை அனைத்து விட்டு பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.