Paruppu Urundai Kuzhambu in Tamil | பருப்பு உருண்டை குழம்பு | Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப்பு உருண்டை குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. காரசாரமான புளிக்குழம்புடன் வேகவைத்த துவரம் பருப்பு உருண்டை சேர்த்து செய்யப்படுவதே பருப்பு உருண்டை குழம்பு.

பருப்பு உருண்டை குழம்பு பாரம்பரிய சுவைமிக்க குழம்பு வகை. இது கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  பருப்பு உருண்டை குழம்பு மிகவும் சுலபமாக செய்யலாம் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். பருப்பு உருண்டை குழம்பு இரண்டு விதமாக செய்யலாம். உருண்டைகளை பிடித்து குழம்பு கொதிக்கும் பொழுது அதில் போட்டு மூடி வைத்து வேக வைக்கலாம், அல்லது பருப்பு உருண்டைகளை வேக வைத்து அதன் பின்னர் குழம்புடன் சேர்த்துக் கொள்ளலாம்.  சுவையான உருண்டை குழம்பு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான பருப்பு  உருண்டை குழம்பு செய்ய சில குறிப்புகள்

  1. பருப்பு உருண்டைகளை  இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சேர்க்கலாம்,  எண்ணெயில் பொரித்து சேர்க்கலாம் அல்லது நேரடியாக கொதிக்கும் குழம்பில் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம்.
  2. நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய், சீரகம் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்து சேர்க்கலாம் அல்லது தேங்காய் விழுதை சேர்க்காமலும் உருண்டை குழம்பு செய்யலாம்.
  3. உருண்டை குழம்பு   கொதித்து கடைசியாக அடுப்பை  அணைப்பதற்கு முன்பு ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்,  சுவை கூடுதலாக இருக்கும்.
  4. தேங்காய் விழுது அரைக்கும் பொழுது முந்திரி பருப்பு சேர்ப்பதற்கு பதிலாக பொட்டுக்கடலை சேர்க்கலாம் அல்லது தேங்காய் மற்றும் சீரகம் மட்டும் சேர்த்து அரைக்கலாம்.
  5. தேங்காய் விழுது சேர்த்த பின்னர் அதிகநேரம் குழம்பு கொதிக்க கூடாது ஒரு நிமிடத்திற்கு பிறகு அணைத்துவிடவும்.

 

 பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு –  1/2 கப்
  • துவரம் பருப்பு –  1/4 கப்
  • காய்ந்த மிளகாய் – 4 
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • சீரகம்  – அரை தேக்கரண்டி 
  • பெரிய வெங்காயம் – 1
  • கருவேப்பிலை –   சிறிதளவு 
  • சின்ன வெங்காயம் –  50 கிராம்
  • உப்பு தேவையான அளவு

உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் –  3 தேக்கரண்டி 
  • வெந்தயம் –  1/8 தேக்கரண்டி
  • கடுகு –  1/2 தேக்கரண்டி 
  • கருவேப்பிலை –  சிறிதளவு 
  • சின்ன வெங்காயம் –  150 கிராம்
  • பூண்டு –  50 கிராம் 
  • தக்காளி – 1 
  • சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள் –  1/2 தேக்கரண்டி 
  • உப்பு தேவையான அளவு 
  • புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு 
  • கொத்தமல்லி இலைகள் –   சிறிதளவு 

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் –  1/4 கப்
  • சீரகம் –  1/2 தேக்கரண்டி
  • முந்திரிப் பருப்பு – 5 

 

செய்முறை

1. பருப்பு உருண்டை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலைப்பருப்பு, கால் கப் துவரம்பருப்பு மற்றும் 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனை 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

3. ஊறிய பின்னர் வடிகட்டியில் ஊற்றி தண்ணீரை வடித்து விடவும்.

4. ஒரு மிக்ஸி ஜாரில் அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு பெரிய வெங்காயம், கருவேப்பிலை சிறிதளவு,  ஊறவைத்துள்ள காய்ந்த மிளகாய் 4 ஆகியவற்றை சேர்த்து  நைஸாக அரைத்துக்  கொள்ளவும்.

5. அதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும்.

6. ஒரு பாத்திரத்தில் அதனை மாற்றி உருண்டைக்கு தேவையான அளவு உப்பு, 50 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

7. அனைத்தையும் நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

8. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள பருப்பு உருண்டைகளை ஒரு இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டில் வைத்து (தட்டில் எண்ணெய் தடவி கொள்ளவும்) பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

9. பருப்பு உருண்டைகள் வெந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

10. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

 11. எண்ணெய் சூடானதும் சிறிதளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.

 12. பின்னர் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

13. அதனுடன் 150 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயம் மற்றும் 50 கிராம் அளவு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

14. பூண்டு மற்றும் வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் ஒரு தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

15. தக்காளி மென்மையாக  வதங்கிய பின்  இரண்டு தேக்கரண்டி சாம்பார் பவுடர், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் குழம்புக்கு தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

16. அதனுடன்  ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து  சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது  தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

17. தயாராக வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

18. ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் நான்கு அல்லது ஐந்து முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 19. குழம்பு நன்கு கொதித்த பின் தேங்காய்  விழுது சேர்த்து கலக்கவும்.

 20.  சிறிதளவு கொத்தமல்லி தூவி ஒரு நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விடவும்.

21. சுவையான  பருப்பு  உருண்டை குழம்பு தயார்.

 

 

Leave a Reply