Badam Payasam in Tamil | பாதாம் பாயசம் | Payasam in Tamil | Badam Javvarisi Payasam

See this Recipe in English

பாதம் ஜவ்வரிசி பாயசம்  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாயசம்.  இது பாதாம் கீர், ஜவ்வரிசி பாயசம், இரண்டும் கலந்த சுவையில் அபாரமாக இருக்கும்.  பொதுவாக ஜவ்வரிசி பாயசம், சேமியா பாயசம்,  பால்  பாயசம்,  போன்றவற்றைக் காட்டிலும் இதுபோன்று வித்தியாசமான சுவையுடன் கூடிய புதுமையான பாயச வகைகள் செய்யும் பொழுது வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள்.  ஜவ்வரிசி பாதாம் பாயாசம் வீட்டு விசேஷங்கள்  மற்றும்  புத்தாண்டு போன்ற பண்டிகைகளுக்கும் செய்து சுவைத்து மகிழலாம்.  சுவையான பாதாம் பாயாசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 

சுவையான பாதாம் பாயாசம் செய்ய சில குறிப்புகள்

  • பாதாம் பாயாசம் செய்வதற்கு  தரமான பாதாம் பயன்படுத்தவும்.
  • தண்ணீர் சேர்க்காத திக்கான பால் பயன்படுத்தினால் பாயசம் சுவையாக இருக்கும்.
  • ஜவ்வரிசியை வேகவைக்கும் பொழுது எளிதாக அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது எனவே அவ்வப்போது கிளறிவிடவும். 
  • சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • குங்குமப் பூ சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது.
  • ஜவ்வரிசிக்கு பதிலாக  சேமியா சேர்த்தும் இதே முறையில் பாயசம் பண்ணலாம்.

இதர பாயசம் வகைகள் – கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • பாதாம் – 1 கப் – 150g
  • பால் –  1 ½ லிட்டர் + ¼ கப்
  • ஜவ்வரிசி –  1 கப் – 150g
  • சர்க்கரை – 1 கப் – 200g
  • குங்குமப்பூ – 1  சிட்டிகை 
  • ஏலக்காய் – 3
  • நெய் – 2 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 10
  • காய்ந்த திராட்சை – 10

செய்முறை

1. ஒரு பவுலில் 1 கப் பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ளவும்.

2. அதனை  வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.

 3. 15-20 நிமிடங்கள் ஊறிய பின்னர் மேல் தோலை பிதுக்கி தனியே எடுக்கவும்.

4. தோல் நீக்கிய பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

5. ஒரு சிறிய கப்பில் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும். அதனுடன்  ¼ கப் பால் சேர்த்து ஊறவைக்கவும்.

6. ஒரு பாத்திரத்தில் 1.5 லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.

7. பால் பொங்கியதும் தனியே எடுத்து வைக்கவும்.

8. ஒரு பாத்திரத்தில் 1 கப் ஜவ்வரிசி எடுத்துக் கொள்ளவும்.

9. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

10. ஜவ்வரிசி  மென்மையாக வெந்து,  கண்ணாடி பதம் வந்தவுடன்,  காய்ச்சிய பாலை  சேர்த்து கலக்கவும்.

11. 5 நிமிடங்களுக்கு பின்னர்,  அரைத்து  வைத்துள்ள பாதாம் விழுது  சேர்த்து 5- 6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

12. அதனுடன் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

13. சர்க்கரை நன்றாக கலந்த பின்னர்,  குங்குமப்பூ சேர்த்த பாலை சேர்க்கவும்.

14. பின்னர் 3 ஏலக்காய்களை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

15. நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

16. எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

17. சுவையான பாதாம்  பாயசம்  தயார். 

Leave a Reply