சோயா குருமா சப்பாத்தி, தோசை, இட்லி, மற்றும் சீரக சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது சோயா சங்ஸ் அல்லது மீல்மேக்கர் என அழைக்கப்படும் சோயாவில் இருந்து செய்யப்படுகிறது. இதனை வெங்காயம்-தக்காளி மசாலாவுடன் சேர்த்து சுலபமாக செய்யலாம், அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைல் மசாலா விழுது அரைத்த அதன்பின்னர் கிரேவி செய்யலாம், இவ்வாறு செய்யும்பொழுது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். ஹோட்டல்களில் கிடைக்கும் சோயா கிரேவி போலவே சுவையாக இருக்கும்.
சுவையான சோயா குருமா செய்ய சில குறிப்புகள்
- சோயாவை வெந்நீரில் போட்டு எடுத்தபிறகு நன்றாக புரிந்து விட்டு பின்னர் பயன்படுத்தவும்.
- மசாலா அரைக்கும் பொழுது தேங்காய் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
- மசாலா செய்வதற்கு நான் கலந்த மிளகாய் தூள் பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் தனி மிளகாய் தூள் பயன்படுத்துவதாக இருந்தால் அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி தூள் சேர்த்துக் கொள்ளவும்.
சோயா குருமா செய்ய தேவையான பொருட்கள்
- சோயா சங்ஸ் – 1 கப் – 100g
- சமையல் எண்ணெய் – 4 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டுப்பல் – 2
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- பெரிய வெங்காயம் – 1 & ½
- தக்காளி – 1
- தேங்காய் – ¼ cup
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – ¾ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – ½ தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – ½ தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 1 கப் சோயா சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
3. மேலும் 10 நிமிடங்களுக்கு அதே கொதிக்கும் நீரில் வைத்து அதன் பின்னர் தண்ணீரை வடித்து விட்டு அதனை பச்சை தண்ணீரில் போடவும்.
4. சோயா சங்ஸ் ஆறிய பின்னர் தண்ணீரை சுத்தமாக பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்க்கவும். அதனுடன் 2 காய்ந்த மிளகாய், 2 பல் பூண்டு, 1 சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
6. அதனுடன் ½ பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
7. அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகள், ஒரு பழுத்த தக்காளி மற்றும் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
8. தக்காளி மென்மையாக வதங்கிய பின்னர் கால் கப் தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
9. அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கலந்த மிளகாய் தூள், மற்றும் 1/2 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
10. வதங்கிய பின்னர் இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
11. ஒரு அகலமான கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
12. சோம்பு பொரிந்த பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
13. அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
14. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
15. பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
16. இப்பொழுது தயாராக உள்ள சோயாவை சேர்த்து கிளறவும்.
17. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
18. நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
19. கொதித்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
20. சுவையான சோயா சங்ஸ் கிரேவி தயார்.