Thakkali Sadam in Tamil | தக்காளி சாதம் | Tomato Rice | Tomato Rice recipe

தக்காளி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு காய்கறிகள் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, மட்டும் போதும்,  நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி, பீன்ஸ், போன்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பல விதமான  கலந்த சாதம் (variety rice) செய்யப்படுகிறது . குறிப்பாக தேங்காய் சாதம்,  புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை.  கலந்த சாதங்கள் பொதுவாக மிச்சமான சாதத்தை வீணாக்காமல் செய்யப்படுவது, அல்லது காலை நேரங்களில் விரைவாக செய்வதற்காக செய்யப்படுகிறது. 

சுவையான தக்காளி சாதம்  செய்ய சில குறிப்புகள்

  • தக்காளி சாதம் செய்ய நன்கு கனிந்த(பழுத்த) தக்காளிகளை பயன்படுத்தவும்.
  • இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, போன்றவை நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இவை இரண்டையும் தவிர்த்து மற்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் மீதமான ஆறிய சாதம் பயன்படுத்தலாம்,  அல்லது உதிரியாக வடித்து அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நீங்கள் பிரஷர் குக்கரில் வெங்காயம், தக்காளி, மசாலாவுடன் அரிசி சேர்த்து 2 விசில் வேக வைத்தும் செய்யலாம்.
  • பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர், போன்ற ஓரிரண்டு காய்கறிகளை (நீங்கள் விருப்பப்பட்டால்) பயன்படுத்திக்கொள்ளலாம். 
  • சாதாரண அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசி சேர்த்தால் தக்காளி சாதம் மிக சுவையாக இருக்கும். 
  • தக்காளி சாதம் தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

 

 

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்

  • 2 பழுத்த தக்காளி நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு உப்பு
  • 2 தேக்கரண்டி  நெய்

 தக்காளி சாதம் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி  எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

2. வெங்காயத்தை 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.

3. பின்னர் 10 முந்திரிப் பருப்புகளை சேர்த்து முந்திரிப்பருப்பு லேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

5. அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

6. பின்னர் 2 பழுத்த தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மசியும் வரை வதக்கி கொள்ளவும்.

7. 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

8. இப்பொழுது 1 cup வடித்த சாதம் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.

9. கடைசியாக 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி  விடவும்.

10. சுவையான தக்காளி சாதம் தயார். 

Leave a Reply