சிறுதானிய பிரியாணி/ திணை காய்கறி பிரியாணி

சிறுதானியங்கள் ஏராளமான நன்மைகள் நிறைந்தது.  குறிப்பாக அது ரத்த கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. மேலும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம்.

சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, மற்றும் பணியாரம், சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். ஆரோக்கியமான சிறுதானியமான  தினையை கொண்டு சுவையான பிரியாணி செய்து சுவைத்து மகிழுங்கள். திணை தவிர குதிரைவாலி, வரகு, சாமை, போன்றவற்றை கொண்டும் நீங்கள் பிரியாணி செய்யலாம்.

சிறுதானிய பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் -1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -1
ஏலக்காய் – 3
பட்டை – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 2
லவங்கம் – 3
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1
திணை அரிசி -1 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மல்லி தூள் – ½ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 2
பீன்ஸ் – 3
பச்சை பட்டாணி -1/4 கப்
கொத்தமல்லி & புதினா

சிறுதானிய பிரியாணி செய்முறை

1.சிறுதானியத்தை கழுவி சுத்தமான தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

2. ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.  அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

 3. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக  வதக்கவும்.

4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

5. பின்னர் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறவும்.

6. தற்பொழுது பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, பீன்ஸ், ஆகியவற்றை வதக்கி வைத்த மசாலாவுடன் கலக்கவும்.

 7. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

8.மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக கிளறவும்.

9. காய்கறி மற்றும் மசாலா நன்றாக வதங்கியதும்   2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். (ஒரு கப் சிறு தானியத்திற்கு இரண்டு கப் தண்ணீர் ).

10. தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊறவைத்து, வடிகட்டிய சிறுதானியத்தை சேர்த்து கிளறவும்.

11. பின்னர் குக்கரை மூடி 2 விசில் வைக்கவும் அல்லது சிறுதானியம் வேகும்வரை மூடி வைத்து வேக வைக்கவும். தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு பொரியலுடன் சிறுதானிய பிரியாணி சுவையாக இருக்கும்.

 

Leave a Reply