See this Recipe in English
தினை கொழுக்கட்டை ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த சிற்றுண்டி வகை பொதுவாக விநாயகர் சதுர்த்தி நாளில் பலவிதமான கொழுக்கட்டைகள் படைக்கப்படுகின்றன. இனிப்பு காரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொழுக்கட்டைகள் செய்யப்படுகின்றன. தினை கொழுக்கட்டை, பாரம்பரியமிக்க உணவு வகை. நமது பாரம்பரிய சிறுதானியம் தினையை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அரிசி மாவை விட இது ஆரோக்கியமானது. 10 முதல் 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக்கூடிய சுவையான கொழுக்கட்டை.
சுவையான தினை கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்
- தினையை வறுக்கும் பொழுது குறைவான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அரைக்கும் பொழுது ரவா போன்று கொரகொரப்பாகஇல்லாமல் அரிசி மாவு போன்று மிகவும் நைசாக இல்லாமல் மிதமாக அரைத்துக் கொள்ளவும்.
- தினையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்தவுடன் குறைவான தீயில் வைத்து கிளறவும்.
- ஓரளவு திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் அல்லது கெட்டியாகும் வாய்ப்புள்ளது.
இதர வகைகள்
மணி கொழுக்கட்டை
ராகி பிடி கொழுக்கட்டை
இனிப்பு பிடி கொழுக்கட்டை
தேங்காய் பூரண கொழுக்கட்டை
கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
எள்ளு பூரண கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- தினை – ½ கப்
- சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- காய்ந்த மிளகாய் – 1
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு வாணலியில் அரை கப் தினை சேர்த்துக் கொள்ளவும்.
2. குறைவான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ½தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 காய்ந்த மிளகாய் சிறிதளவு கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
7. தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள தினையை சேர்த்துக் கொள்ளவும்.
8. குறைவான தீயில் வைத்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறவும்.
9. பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதனை மூடி வைத்து ஆறவிடவும்.
10. ஓரளவு ஆறிய பின்னர் ஒரு பௌலில் கொட்டி ஒரு முறை பிசைந்து கொள்ளவும்.
11. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நான்கு விரல்களால் அழுத்திப் பிடிக்கவும்.
12. ஒரு இட்லி தட்டில் அல்லது ஸ்டீமர் தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை வைக்கவும்.
13. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டை வைத்து 10 – 12 நிமிடங்கள் வேக வைக்கவும்
14. ஓரளவு ஆறிய பின்னர் தட்டிலிருந்து எடுத்து வைக்கவும். சுவையான தினை கொழுக்கட்டை தயார்.