Poornam Kozhukattai in Tamil | கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை | Poornam kozhukattai | Kozhukattai recipe

பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் மிகவும் பிடித்த,  விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய கொழுக்கட்டை.  புராணங்களில் பல வகைகள் உண்டு. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை, எள்ளு பூரணம் கொழுக்கட்டை, உளுந்து பூரண உப்பு கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை போன்றவை.  கடலை பருப்பு பூரணம் சுலபமாக செய்யக்கூடிய அதேசமயத்தில் சுவையான பூரணம்.  சுவையான கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை நீங்களும் செய்து இறைவனுக்கு படைத்து மகிழுங்கள்.

சுவயான பூரண கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்

  1. கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை செய்வதற்கு கடலைப்பருப்பை பஞ்சு போல வேக வைக்க வேண்டும்.  அதனை பிரஷர் குக்கரில் வேக வைக்கும் பொழுது சுலபமாக வேக வைக்கலாம்.
  2. கடலைப்பருப்பு வெந்தபிறகு மசித்துக் கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் மாற்றி அரைத்துக் கொள்ளலாம்.
  3. நான்  அரை கப் கடலைப்பருப்பு – ஒரு கப்  வெல்லம் சேர்த்து உள்ளேன் நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் சுவைக்கேற்ப வெள்ளம் கூடுதலாகவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
  4. தேங்காய் சேர்க்கும் போதும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  5. நான் வீட்டில் மாவரைத்து கொழுக்கட்டை  செய்முறை குறிப்பிட்டுள்ளேன்,  நீங்கள் கடை மாவு பயன்படுத்துவதாக இருந்தால் நேரடியாக வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை,  எள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை, பருப்பு பாயசம், கடலை பருப்பு பாயசம், அவல் பாயசம்

கொழுக்கட்டை மாவு

செய்முறை

1. ஒரு கப் பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. ஊறியதும் தண்ணீரை வடித்து கொள்ளவும்.

3. பேனுக்கு அடியில் ஒரு காட்டன் துணியை விரித்து  அதில் அரிசியை  காயவைக்கவும்.

4. ஒரு மணி நேரத்திற்குப் பின்பு அதனை  மிக்ஸி  ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.

5. நைசாக அரைத்துக் கொள்ளவும்.

6. ஒரு சல்லடை வைத்து சலித்துக்கொள்ளவும்.

7. அரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஒரு கடாயில் கொட்டி மிதமான சூட்டில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும்.

8. பின்னர் தனியே எடுத்து வைத்து ஆற வைக்கவும்,  இப்பொழுது கொழுக்கட்டை மாவு தயார்.

கடலை பருப்பு பூரணம்

செய்முறை

1. பூரணம் செய்வதற்கு அரை கப் கடலைப் பருப்பை ஒரு முறை தண்ணீரில் கழுவி விட்டு பிரஷர் குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

 2. அரை கப் தண்ணீர்  சேர்த்துக் கொள்ளவும். 

3. பிரஷர் குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.

4. கடலைப்பருப்பு வெந்தபிறகு ( ஆறியதும்)  மத்து வைத்து மசித்துக் கொள்ளலாம் அல்லது ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து  நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு கடாயில் ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

6. வெல்லம் கரைந்த பின்னர் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைக்கவும்.

7. ஐந்து முதல் ஆறு நிமிடங்களில் வெல்லம் கெட்டியானதும் அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.

 9. இப்பொழுது வேகவைத்து அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும்.

10. கடலை பருப்பு பூரணம் கெட்டியானதும், 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.  அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

பூர்ண கொழுக்கட்டை

செய்முறை

1. ஒரு பானில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

2. அதில் ஒன்றை கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

3. அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

4. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

5. 2 நிமிடங்களுக்கு கிளறவும் மாவு கெட்டியாக சேர்ந்து வருவதைக் காணலாம். 

6. இப்பொழுது அடுப்பை  அனைத்து தனியே வைக்கவும். கை பொறுக்கும் சூடு வந்ததும் மென்மையாக பிசைந்து கொள்ளவும்.


7. ஒரு உருண்டை மாவை எடுத்து வாழை இலை அல்லது பால் பேப்பரில் வைத்து நைசாக தட்டிக் கொள்ளவும்.

8. அதனுள் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி பூரணம் வைத்துக் கொள்ளவும்.

9. மூடி வைத்து ஓரங்களை ஒட்டவும்.

10. இதே போல எல்லா மாவிலும் கொழுக்கட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

11. ஒரு இட்லி பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து சூடானதும் அதன்மேல் இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டு வைக்கவும் ( அதில் எண்ணெய் தடவி கொள்ளவும்). அதனுள்  கொழுக்கட்டைகளை வைத்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

 12. சுவையான கடலை பருப்பு பூரணம் கொழுக்கட்டை தயார். 

Leave a Reply