காலிபிளவர் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சூப்பரான சாத வகை. இதை எளிமையான முறையில் பிரஷர் குக்கரில் 30 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். ப்ரஷர் குக்கரில் செய்ய விரும்பாதவர்கள் மூடி போட்ட பாத்திரத்தில் செய்யலாம்.
காலிஃப்ளவர் சாதம் நீங்கள்இரண்டு விதமான முறைகளில் செய்யலாம். காலிஃப்ளவரை லேசாக வதக்கி அரிசியுடன் சேர்த்து வேக வைக்கலாம் அல்லது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வறுத்து வைத்துவிட்டு பின்னர் சாதம் தயார் ஆனதும் அதனுடன் கலந்து பரிமாறலாம். இரண்டு முறைகளுமே சுவையாக இருக்கும். இதில் காலிஃப்ளவர் உடன் வேறு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான காலிபிளவர் சாதம் சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதர வகைகள் – எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, கல்யாண வீட்டு வத்த குழம்பு, காலிஃப்ளவர் சாதம், காராமணி குழம்பு , புதினா சாதம், பருப்பு உருண்டை குழம்பு, தேங்காய் சாதம், சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, அரிசி பருப்பு சாதம், கத்திரிக்காய் சாதம்
காலிபிளவர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
- 2 கப் பூவாக நறுக்கிய காலிஃப்ளவர்
- 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1 கை அளவு கொத்தமல்லி தழை
- 1 பெரிய தக்காளி
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்/காரத்திற்கேற்ப
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
காலிபிளவர் சாதம் செய்முறை
(காலிஃப்ளவரை விருப்பமான அளவில் நறுக்கி மிதமான சூட்டில் தண்ணீரில் போட்டு 2 நிமிடங்களுக்குப் பின் எடுக்கவும். புழுக்கள் நீக்குவதற்கு இவ்வாறு செய்ய வேண்டும்)
1. ஒரு அகன்ற வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும், காலிஃப்ளவரை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. பாஸ்மதி அரிசியை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. ஒரு பிரஷர் குக்கரில் அல்லது அடி கனமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
6. அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வேக வைக்கவும்.
7. பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும் .
8. மசாலாவை நன்கு கலந்து எண்ணெய் பிரியும் வரை வேக வைக்கவும்.
9. அதனுடன் ஊற வைத்து பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும்.
10. பின்னர் 1 கப் அரிசிக்கு 1.5 கப் வீதம் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
11. அதனுடன் லேசாக வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் சேர்த்து கலந்து விடவும்.
12. பிரஷர் குக்கரில் 2 விசில் வைக்கவும் / சாதம் பூப்போல வேகும் வரை வேக வைக்கவும்.
13. சுவையான காலிஃப்ளவர் சாதம் தயார்.