காலிஃப்ளவர் சாதம் சுவையான மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கு ஏற்ற சாதம். காலிஃப்ளவர் சாதம் பலவிதமாக செய்யலாம். காலிஃப்ளவரை உதிர்த்துவிட்டு செய்யலாம் அல்லது காலிஃப்ளவர் பூக்களை மசாலா தடவி எண்ணெயில் பொறித்து அதன் பிறகு சாதத்துடன் கலக்கலாம். காலிபிளவரை தனியாக பொரித்து பின்னர் சாதத்துடன் கலக்கும் முறையில் செய்துள்ளேன். இது வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, சுவையும் அபாரமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை இருக்கும்.
சுவையான காலிபிளவர் சாதம் செய்ய சில குறிப்புகள்
- காலிபிளவர் சாதம் செய்வதற்கு நீங்கள் பாஸ்மதி அரிசி பயன்படுத்தலாம் அல்லது எந்த வகை அரிசி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- சாதம் வடிக்கும் போது உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
- சாதத்தை தனியாக வடித்து சேர்த்துக்கொள்ளலாம் அல்லது மசாலா கலவை தயார் ஆன உடன் ஒரு கப் அரிசியுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நேரடியாக பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளலாம்.
- காலிஃப்ளவர் சாதம் செய்தவுடன் சூடாக பரிமாறவும் அல்லது காலிஃப்ளவரில் முறுமுறுப்பு தன்மை மாறிவிடும்.
- காலிஃப்ளவரை பொரிக்கும் போது மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
- மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு அல்லது மொறுமொறுப்பாக ஆகும் வரை பொரிக்கவும்.
இதர வகைகள் – காலிஃப்ளவர் 65, காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ், காலிபிளவர் வறுவல், காலிபிளவர் மஞ்சூரியன், காளிஃபிளவர் பட்டாணி குருமா
காலிஃப்ளவர் பொறிக்க தேவையான பொருட்கள்
- காலிபிளவர் – 250 கிராம்
- மைதா- 3 தேக்கரண்டி
- கான்பிளவர் / சோள மாவு – 2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. 250 கிராம் காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி 2 நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைத்து பின்னர் ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
2. அதனுடன் மூன்று தேக்கரண்டி மைதா மற்றும் 2 தேக்கரண்டி சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரைத்தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
4. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
6. மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு பொறிக்கவும் அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும். காலிபிளவர் நன்கு பொரிந்து மொறுமொறுப்பாக ஆனதும் தனியே எடுத்து வைக்கவும்.
காலிஃப்ளவர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3 ( நடுவில் கீறியது)
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
- தக்காளி – 1
- 1 கப் (200 gram) அரிசியில் உதிராக வடித்த சாதம்
செய்முறை
1. காலிஃப்ளவர் சாதம் செய்வதற்கு ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
2. அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
3. வெங்காயம் மென்மையாக வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
4. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் ஒரு தேக்கரண்டி மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5. நன்கு வதங்கிய பின்னர் ஒரு பெரிய சைஸ் தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
6. தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
7. வதங்கிய பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
8. எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு கப் அரிசியில் உதிர் உதிராக வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்.
9. சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
10. இப்பொழுது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்துக்கொள்ளவும் அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும்.
11. நன்கு கலந்த பின்னர் சூடாக பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சாதம் தயார் .