Cauliflower Fry | காலிபிளவர் வறுவல் | Cauliflower fry recipe | how to make cauliflower fry

See this Recipe in English

காலிஃப்ளவர் வறுவல் கோபிஃப்ரை, கோபி 65, காலிஃப்ளவர் ஃப்ரை, என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. காலிபிளவர் வறுவல் மிகவும் மொறுமொறுப்பான காரசாரமான மற்றும் சுவையான உணவு வகை. இது தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதுவும் மும்பை போன்ற பிரபலமான நகரங்களில் தெருவோர கடைகளில் மிக மிக பிரபலம்.  காலிபிளவர் வறுவல் தற்போதைய காலங்களில் திருமணம் போன்ற விசேஷ வீடுகள், குடும்ப விழாக்கள், ஆகிய விருந்துகளில் மிகவும் சிறப்பாக பரிமாறப்படுகிறது.

காலிபிளவர் வறுவல் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட மாவில் முக்கி எடுத்து பின்னர் எண்ணெயில் பொரிக்க படுகிறது. காலிஃப்ளவர் வறுவல் போன்று காலிஃப்ளவர் 65 மற்றும் காலிஃப்ளவர் மஞ்சூரியன் போன்றவை செய்யப்படுகிறது. இது காலிஃப்ளவரை பொரித்து எடுத்த பின்பு சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் நறுக்கிய பூண்டு ஆகியவற்றில் போட்டு பிரட்டி எடுத்து பரிமாறப்படுகிறது.

காலிஃப்ளவர் வறுவல் மாலை நேர சிற்றுண்டியாக காபி மற்றும் டீ யுடன் பரிமாறலாம், அல்லது காலிஃப்ளவர் ஃப்ரை டொமேட்டோ கெட்சப் மற்றும் தயிர் பச்சடி ஆகியவற்றுடன் பரிமாறலாம். மேலும் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தேங்காய் பால் சாதம், ஆகியவற்றுடன் காலிபிளவர் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.

சுவையான காலிபிளவர் வறுவல் செய்ய சில குறிப்புகள்

  • மைதா மாவு மற்றும் சோள மாவு ஆகிய இரண்டையும் சரி சமமாக எடுத்துக் கொள்ளவும். 
  • அரிசி மாவு 2 தேக்கரண்டிக்கு மேல்  சேர்க்க வேண்டாம், அதிகம் சேர்த்தால் வறுவல் மிகவும் கடினமானதாக இருக்கும்.
  • மைதா மாவுக்கு பதிலாக நீங்கள் கோதுமை மாவு சேர்த்தும் செய்யலாம்.
  • விருப்பப்பட்டால் மாவு கலக்கும் பொழுது 1/2 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்.
  • மாவு கலக்கும் பொழுது 1 தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம் இது சுவையை கூட்டும்.
  • விருப்பமில்லை எனில் பேக்கிங் சோடா எனப்படும் ஆப்பசோடா சேர்க்காமல் செய்யலாம்.
  • ஆரஞ்சு நிறம் விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் அல்லது ஆரஞ்சு நிறம் சேர்க்காமலும் காலிபிளவர் வறுவல் செய்யலாம்.

இதர வகைகள் – பாசிப்பருப்பு ஃப்ரை, சிக்கன் வறுவல் , காலிஃப்ளவர் 65, காலிபிளவர் வறுவல், பில்டர் காபி, சாக்லேட் காபி,காராபூந்தி, தயிர் வடை, வாழைப்பூ வடை, உடனடி மெதுவடை, மொரு மொரு வடை, சாம்பார் வடை, மெதுவடை,  மிக்சர்.

 காலிபிளவர் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர் (300 grams)
  • 4 தேக்கரண்டி மைதா
  • 4 தேக்கரண்டி கான்பிளவர் மாவு
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • ஆரஞ்சு நிறம் சிறிதளவு
  • தேவையான அளவு உப்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • பச்சை மிளகாய் சிறிதளவு
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து சூடாக்கவும்.

2. தண்ணீர் சூடானதும் அதில் 1 தேக்கரண்டி  உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. காலிபிளவரை சிறுசிறு பூக்களாக நறுக்கி அதனை சூடான தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும்.

 4. 2 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

5. ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி மைதா மாவு, 4 தேக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

 6. ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறத்தை 2 தேக்கரண்டி தண்ணீரில் கலந்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

 7. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

8. பின்னர் காலிஃப்ளவர் பூக்களை சேர்த்து கலக்கவும்.

9. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் காலிபிளவரை ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ளவும்.

10. மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைத்த பின்னர் அவப்போது திருப்பி போடவும்.

11. காலிபிளவர் ஓரளவு வெந்த பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரிக்கவும்.

12. காலிஃப்ளவர் வெந்து நுரை அடங்கிய பின்னர்,  எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

13. சுவையான காலிபிளவர் வறுவல் தயார். 

Leave a Reply