தேங்காய்ப்பால் வெஜிடபிள் புலாவ்

தேங்காய்ப்பால் புலாவ் மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  தேங்காய்ப்பால் வெஜிடபிள் புலாவ் பாசுமதி அரிசி, தேங்காய் பால், விருப்பமான காய்கறிகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

தேங்காய்ப்பால் புலாவ் செய்வதற்கு நீங்கள் வீட்டில் தயாரித்த தேங்காய் பாலையும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது கடைகளில் டின்னில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை நீங்கள் எளிமையான முறையில் பிரஷர்குக்கரில் செய்யலாம். சுவையான தேங்காய் பால் புலாவ் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேங்காய்ப்பால் புலாவ் செய்யத் தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 கப் தேங்காய்ப் பால்
  • 2 தேக்கரண்டி நெய்/எண்ணெய்
  • சிறிய துண்டு பட்டை
  • 3 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 3/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு கையளவு கொத்தமல்லி இலைகள்
  • 2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் உங்களது விருப்பமான காய்கறிகள்).
  • 3 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்

தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை

1. பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து வைக்கவும்.

2. காய்கறிகள் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. பிரஷர் குக்கரில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சூடாக்கவும்.

2. பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

3. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

6. பின்னர் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

7. பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

8. பின்னர் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கவும்.

9. அதனுடன் ஊறவைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.

10. பின்னர் 1 கப் அரிசிக்கு 1 கப் தேங்காய் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். ( நீங்கள் சேர்க்கும் அரிசிக்கு  தகுந்தாற்போல் 1:2  என்ற வீதத்தில் பாதி அளவு தண்ணீர் மற்றும் பாதி அளவு தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்).

11. பின்னர் பிரஷர் குக்கரை மூடி வைத்து 2 விசில் வைக்கவும்.

12. பிரஷர் போனதும் குக்கரை திறந்து மென்மையாக கிளறவும். சுவையான தேங்காய்ப்பால் புலாவ் தயார்.

Leave a Reply