See this Recipe in English
காளான் பிரியாணி சுவையான மற்றும் விரைவில் செய்யக்கூடிய சுலபமான உணவு வகை. இதனை மதிய உணவு அல்லது இரவு நேர உணவாக தாராளமாக செய்யலாம். 30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக் கூடிய உணவை என்பதால் இது லஞ்ச் பாக்ஸ்க்கு செய்ய ஏற்றதாக இருக்கும். காளான் பிரியாணி வெங்காய பச்சடி, முட்டை தொக்கு, சிக்கன் அல்லது சைவ கிரேவி வகைகளுடன் சுவையாக இருக்கும்.
காளான் பிரியாணியை காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் காளான் மட்டுமே சேர்த்து செய்துள்ளேன் இதற்கு பதிலாக கேரட், பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் சேர்ப்பதாக இருந்தால் காளானுடன் காய்கறிகளையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
சுவையான காளான் பிரியாணி செய்ய சில குறிப்புகள்
- பிரியாணி செய்வதற்கு பாஸ்மதி அரிசி பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். அதற்கு பதிலாக சீரக சம்பா அரிசி பயன்படுத்தலாம். சீரக சம்பா அரிசி பயன்படுத்துவதாக இருந்தால் 1 கப் அரிசிக்கு 2 – 2.5 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் சாதம் குழைந்து விடும் வாய்ப்புள்ளது.
- பிரியாணியை குறைவான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும் அல்லது அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
- வயலட் மஷ்ரூம் எனப்படும் பழுப்பு நிற காளான் பயன்படுத்தியுள்ளேன், அதுதவிர பட்டன் மஷ்ரூம் அல்லது கடைகளில் கிடைக்கும் எல்லா விதமான காளானையும் பயன்படுத்தி இதே முறையில் பிரியாணி செய்யலாம்.
- பிரியாணியின் நிறத்திற்காக சிகப்பு மிளகாய் தூள் சேர்த்துள்ளேன், அதனை விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
- பிரியாணிக்கு கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை நேரடியாக சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதனை லேசாக வறுத்து பொடித்து சேர்த்துக் கொள்ளலாம்.
- காளான் வெந்த பின்னர் விருப்பப்பட்டால் 2 மேஜைக்கரண்டி கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
- தக்காளி சேர்ப்பதற்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள்
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி
ஐதராபாத் முட்டை பிரியாணி
சிக்கன் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
முட்டை ஃப்ரைட் ரைஸ்
காலிஃப்ளவர் சாதம்
பன்னீர் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
மசாலா பொருட்கள்
- பிரிஞ்சி இலை – 2
- பட்டை – 1
- நட்சத்திர சோம்பு – 1
- ஏலக்காய் – 4
- லவங்கம் – 5
- பொடித்த ஜாதிக்காய் – 1 சிட்டிகை
- கல்பாசி – 1 சிட்டிகை
இதர பொருட்கள்
- பாஸ்மதி அரிசி – 1 கப் – 200g
- காளான் – 300g
- சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
- நெய் – 1 மேஜைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3
- புதினா – சிறிது
- கொத்தமல்லி – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 – 250g
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- தக்காளி – 1
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் – ¼ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பவுலில் 1 கப் பாஸ்மதி அரிசியை சேர்த்து, ஒரு முறை கழுவிய பின்னர் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
3. ஒரு அகலமான பாத்திரத்தில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கொள்ளவும்.
4. பின்னர் இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
5. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
6. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போக வதங்கியபின் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
7. பின்னர் 3 பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை நறுக்கி சேர்த்து கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லி சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
8. அதனுடன் ஒரு தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
9. அதனுடன் தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். மிளகாய் தூளில் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
10. பின்னர் காளானை சுத்தம் செய்து ¼ இன்ச் முத்தத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மசாலா கலவையுடன் காளானை சேர்த்து வதக்கவும். அதனை மூடி வைத்து குறைவான தீயில் வைத்து வேக வைக்கவும்.
11. பின்னர் 1 ¼ தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்த பின்னர் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
12. இதனை மூடி வைத்து குறைவான தீயில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
13. வெந்த பின்னர் ஒரு கரண்டி கொண்டு மெதுவாக கிளறவும் சுவையான காளான் பிரியாணி தயார்.