Egg Biriyani in Tamil | ஐதராபாத் முட்டை பிரியாணி | Egg Dum Biriyani | Hyderabad Style Egg Dum Biriyani

See this Recipe in English

ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி மிகவும் சுவையான பிரியாணி வகை. இது அவித்த முட்டை, சாதம், பொரித்த வெங்காயம், மற்றும் இதர மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. பிரியாணி பலவிதமாக செய்யப்படுகிறது உதாரணமாக காய்கறிகள், முட்டை, மீன், கோழி கறி மற்றும் ஆட்டுக்கறி ஆகியவற்றை கொண்டு செய்யலாம். தம் பிரியாணி சாதாரண பிரியாணியை விட வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஹைதராபாத் தம் பிரியாணி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. இது முகலாயர்கள் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது. ஹைதராபாத் தம் பிரியாணி பொதுவாக ஆட்டுக்கறி கொண்டு செய்யப்படும்.

தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும். செட்டிநாடு பிரியாணி நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படுகிறது. ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி போன்றவை ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் சுவையான பிரியாணி வகை. முட்டை தம் பிரியாணி வெங்காய பச்சடி, மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்

சுவையான பிரியாணி செய்ய சில குறிப்புகள்

  • ஹைதராபாத் தம் முட்டை பிரியாணி செய்வதற்கு தரமான பாசுமதி அரிசி பயன்படுத்தவும் மற்ற அரிசி வகைகள் இதற்கு அவ்வளவு சுவை தராது.
  • சாதம் வடிக்கும் போது மென்மையாக வேகும்வரை வைக்கக்கூடாது 90% வெந்தபிறகு தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  • சாதம் வடித்த பின்பு தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்கவும் அல்லது பிரியாணி நீர் கோர்த்தது போல் இருக்கும்.
  • 2 தேக்கரண்டி எண்ணெயில் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளலாம் அல்லது எண்ணையில் பொரித்து வைத்துக்கொள்ளலாம்.
  • 6 முட்டை சேர்த்துள்ளேன், முட்டை பிடிக்கும் எனில் மேலும் 3 அல்லது 4 சேர்த்துக்கொள்ளலாம்.
  • தம் பிரியாணி செய்யும் பொழுது கடைசியாக   குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைக்கலாம் அல்லது தோசை கல்லின் மீது வைத்து வேக வைக்கலாம் இது அடி பிடிப்பதை தவிர்க்கும்.
  • மேலும் சாதாரண மூடிக்கொண்டு அழுத்தமாக மூடலாம் அல்லது சப்பாத்தி மாவு வைத்து ஆவி வெளியேறாமல் இருக்க சுற்றிலும் மூடலாம் அல்லது அலுமினியம் பேப்பர் கொண்டு மூடலாம்.
  • சாதாரண மூடியின் மேல் கனமான கல்லை வைத்தும் தம் போடலாம்.
  • விருப்பப்பட்டால் குங்குமப்பூ கலந்த பாலை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது குங்குமப்பூவை சிறிதளவு தண்ணீரில் கலந்து சேர்க்கலாம்.
  • ஆரஞ்சு நிறத்தை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

இதர அசைவ வகைகள் –  தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி,  சிக்கன் பிரியாணி,வெஜிடபிள் பிரியாணிஇறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவிமுட்டை குழம்பு.

 

See this Recipe in English

ஐதராபாத் முட்டை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

சாதம் வடிப்பதற்கு…

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 2 பிரிஞ்சி இலை
  • 5 லவங்கம்
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 2  ஜாதிபத்திரி
  • தேவையான அளவு உப்பு 
  • 3 தேக்கரண்டி எண்ணெய்

வெங்காயம் வறுப்பதற்கு

  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது

முட்டை மசாலாவிற்கு…

  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 6 அவித்த முட்டை
  • தேவையான அளவு உப்பு
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

பிரியாணி மசாலாவிற்கு…

  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 10 முந்திரி பருப்பு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • பொடியாக நறுக்கிய புதினா சிறிதளவு
  •  2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1.5 தேக்கரண்டி தனியாத்தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 1 தக்காளி
  • 1/4 கப் தயிர்

இதர பொருட்கள்…

  • பொடியாக நறுக்கிய புதினா ஒரு கை அளவு
  • பொடியாக நறுக்கிய கொத்த மல்லி ஒரு கையளவு
  • ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  • 5 தேக்கரண்டி பால்

ஹைதராபாத் முட்டை பிரியாணி செய்முறை

சாதம்

1. 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

2. ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தில் 5 முதல் 6 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.

4. தண்ணீர் சூடானதும் 2 பிரிஞ்சி இலை, 5 லவங்கம், 1 இன்ச் பட்டை, 2 ஜாதிபத்திரி, தேவையான அளவு உப்பு மற்றும் 3 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும்.

5. அதனுடன் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள அரிசியை  சேர்த்து கிளறவும்.

6. 7 முதல் 8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது 90% சாதம் வேகும் வரை வைக்கவும். இப்பொழுது முற்றிலும் தண்ணீர் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

வெங்காயம்

1. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

2. 5-6 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வறுக்கவும். பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.

முட்டை மசாலா 

1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.அதனுடன் 6 வேகவைத்த முட்டைகளை சேர்க்கவும்.

2.  முட்டைக்கு தேவையான உப்பு, 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

3. 1முதல் 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

4. பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

பிரியாணி மசாலா

1. அதே வாணலியில் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

2. பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

3. அதனுடன் 10 முந்திரி பருப்பு கொத்தமல்லி இலை சிறிதளவு, புதினா இலைகள் சிறிதளவு, ஆகியவற்றை சேர்க்கவும்.

4. அதனுடன் 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1.5 தேக்கரண்டி மல்லித் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

5. அதனுடன் 1 பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.

6. தக்காளி மசியும் வரை வதக்கவும்.

7. பின்னர் 1/4 கப் கெட்டியான தயிர் சேர்த்து கிளறவும்.

8. மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

9. இப்போது பிரியாணி மசாலா தயாராக உள்ளது.

முட்டை தம் பிரியாணி 

1. பிரியாணி மசாலா வில் இருந்து பாதி அளவு மசாலாவை எடுத்து தனியே வைத்துக் கொள்ளலாம்.

2. இப்போது மீதமுள்ள மசாலாவில் மூன்று முட்டைகளை சேர்க்கவும்.

3. அதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை (  பாதி அளவு) சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.

4. பின்னர் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும்.

5. பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

6. இப்பொழுது எடுத்து வைத்துள்ள பிரியாணி மசாலா சேர்க்கவும்.

7. மீதமுள்ள சாதம், முட்டை, வறுத்த வெங்காயம், மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

8. கடைசியாக ஒரு சிட்டிகை குங்குமப்பூவை 5 தேக்கரண்டி பாலில் கலந்து சேர்க்கவும்.

9. இப்பொழுது குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

10. 15 நிமிடங்களுக்குப் பின்னர் சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும் சுவையான முட்டை பிரியாணி தயார்.

Leave a Reply