Sprouted Green Gram Curry in Tamil | முளைகட்டிய பச்சைப் பயிறு குருமா | Mulai Kattiya Pachai Payaru Kuruma

See this Recipe in English

முளைகட்டிய பச்சை பயறு குருமா மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.  இதனை இட்லி,  தோசை,  சப்பாத்தி,  பிரட்  ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். முளைகட்டிய பச்சைப் பயிறு உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். ப்ரோட்டின், விட்டமின், மினரல், போன்றவை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு உடலை வலுவாக்க உதவும்.  உடல் எடை குறைப்பதற்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை  சீராக்கவும் ஏற்றது. தொடர்ந்து முளைகட்டிய பச்சை பயிறு சாலட் சாப்பிட்டு வந்தால் கணிசமான அளவில் உடல் எடையை குறைக்கலாம்.  சாலட் சாப்பிடுவதுடன், அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது, ஆகியவற்றை சேர்த்து செய்யும் பொழுது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் மேலும் சுறுசுறுப்புடனும் செயல்படுவதற்கு இது ஏற்ற உணவாகும். 

 முளைகட்டிய பச்சைப் பயிறு செய்முறை

  • பச்சை பயிரை முளை கட்டுவதற்கு அதனை 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

  • ஊறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வடி கட்டி போன்று துளைகள் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.

  • அதனை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.

  •  மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அதனை வைக்கவும்.
  • தினமும் காலையும் மாலையும் அதனை ஒரு முறை கழுவி விட்டு துணியை மீண்டும் ஈரம் செய்து பிரிந்து அதன் மேல் போடவும்.
  • முதல் நாளிலேயே பச்சை பயிறு முளை கட்டி இருப்பதை காணலாம் விருப்பப்பட்ட அளவிற்கு வளர்ந்ததும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

See this Recipe in English

சுவையான பச்சை பயறு குருமா செய்ய சில குறிப்புகள்

  • முளைக்கட்டிய பச்சை பயிரை அதிக நேரம் வேக வைக்க வேண்டாம் குறைந்த நேரம் வேக வைத்தாலே போதுமானது சத்துக்கள் இழக்காமல் இருக்கும்.
  • விருப்பப்பட்டால் சிறிதளவு தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை அரைத்து குருமா இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக சேர்த்துக் கொள்ளலாம்.
  • கரி மசாலாவிற்கு பதிலாக கரம் மசாலா பயன்படுத்திக் கொள்ளலாம்,   கரம்மசாலா சேர்ப்பதாக இருந்தால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மிளகாய்த் தூள் கலந்த தூள்( மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து அரைத்தது)தனி மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் அதனுடன் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • உங்கள் சுவைக்கேற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம் .
  • இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது சேர்க்காமலும் செய்யலாம்.
  • குருமா கெட்டியாக வேண்டுமானால் தண்ணீரை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
  • அவ்வப்போது தண்ணீர் தெளித்து வேக வைத்துக் கொள்ளவும்.

தினை கொழுக்கட்டை

ராகி பிடி கொழுக்கட்டை

சிறுதானிய பாயசம்

தினை பாயசம்

 

 

 தேவையான பொருட்கள்

  •  பச்சை பயிறு – ½ கப் – 100g
  •  பெரிய வெங்காயம் – 1
  •  தக்காளி – 1
  •  இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 3
  •  கொத்தமல்லி தழை –  சிறதளவு
  •  மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  •  உப்பு –  தேவையான அளவு
  •  மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி
  •  காஷ்மீரி  மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
  • கறி மசாலா – ½  தேக்கரண்டி
  • சீரகம் – 1  தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் – 1   தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

2. ஜீரகம் பொரிந்த பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,   பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளவும்.

3. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர் ஒரு தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம்.

4. தக்காளி மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். தக்காளி வதங்கிய பின்னர் அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்,  ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்,  ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்,  அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

5. மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவை வேகவிடவும். 

6. மசாலா  வெந்த பின்னர்,  முளைகட்டிய பச்சைப் பயிறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

7. மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

8. சுவையான பச்சைப்பயிறு குருமா தயார். 

Leave a Reply