Paruppu Payasam in Tamil | பருப்பு பாயசம் | Pasiparuppu Payasam in Tamil | Moong Dal Payasam

See this Recipe in English

பருப்பு  பாயசம்  பாசிப்பருப்பு,  வெல்லம்,  தேங்காய் பால்,  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது எல்லாவிதமான விசேஷங்களுக்கும் (நெய்வேதியம்) கடவுளுக்கு படைக்கலாம். அதுதவிர விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு போன்ற விசேஷங்களுக்கும் பிரசாதமாக செய்வது சிறப்பானது.  இதனை பால் பாயசம் போன்று மிகவும் சுலபமாக விரைவாக செய்யலாம் அதே சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

 சுவையான பருப்பு பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • பாயசம் செய்வதற்கு பாசிப்பருப்பை ஒரு முறை கழுவி விட்டு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டுப் பயன்படுத்தலாம் அல்லது  முரத்தில் புடைத்து குப்பைகளை நீக்கி விட்டு உபயோகிக்கலாம்.
  • 100 கிராம் பாசிப்பருப்புக்கு 100 கிராம்  வெல்லம் சேர்த்துள்ளேன்,  நீங்கள் விருப்பத்திற்கேற்ப வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வீட்டிலேயே  தேங்காய்  பால் எடுப்பதற்கு,  கால் மூடி தேங்காயைத் துருவி மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து, அதனை பிழிந்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்,  அல்லது கடைகளில் கிடைக்கும் தேங்காய் பால் பயன்படுத்தலாம். 
  • வீட்டில் எடுத்த தேங்காய் பால் பயன்படுத்துவதாக இருந்தால்  இரண்டாவது பால் பயன்படுத்தவும்,  கடைகளில் வாங்கிய தேங்காய்ப்பால் பயன்படுத்தும் போது சிறிதளவு தண்ணீர் கலந்து பின்னர் பயன்படுத்தவும்.
  • தேங்காயை துருவி சேர்ப்பதற்கு பதிலாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
  • ஏலக்காய் பொடி அரைக்கும் பொழுது  சர்க்கரை சேர்த்து உள்ளதால் அரை தேக்கரண்டி சேர்த்துள்ளேன்,  சேர்த்து உள்ளேன். வெறும்  ஏலக்காய் பொடி  சேர்த்தால்  கால் தேக்கரண்டி  சேர்த்துக் கொள்ளவும். 
  • பாசிப் பருப்பை பேனில் வேக வைப்பதற்கு பதிலாக பிரஷர் குக்கரில் வைத்து 3 விசில் வைத்து வேக வைக்கலாம்.

இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டைஎள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை

 

 

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு –  ½  கப் – 100g
  • வெல்லம் – ¾ கப் – 100g
  • தேங்காய் பால் – ½ கப்
  • நெய் – 1  மேஜை கரண்டி
  • முந்திரி பருப்பு – 10
  • காய்ந்த திராட்சை – 10 – 15
  • ஏலக்காய் பொடி – ½  தேக்கரண்டி 
  • துருவிய தேங்காய் – ½  கப்

செய்முறை

1. ஒரு பானில் 1/2 கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

2. மிதமான தீயில் 4 – 5 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும் அல்லது லேசான பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். 

3. பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில்  வேக வைக்கவும்,  அவ்வப்போது கிளறி விடவும் அல்லது அடி பிடிக்க வாய்ப்புள்ளது.

4. ஒரு பாத்திரத்தில் ¾  கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனுடன் ½  கப் தண்ணீர் சேர்த்து  கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

6. பாசிப்பருப்பு மென்மையாக வெந்தவுடன்,  ஒரு கரண்டியால் லேசாக மசித்து விடவும்.

 

7. பின்னர் வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

8. வெல்லமும் பாசிப்பருப்பும் நன்றாக கலந்த பின்னர், ½  கப் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். 

9. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.

 

10. ஒரு சிறிய பாத்திரத்தில் 1  மேஜை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

11. நெய் சூடானதும்  10 முந்திரி பருப்புகளை சேர்த்து,  லேசான பொன் நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

12. அதனுடன் 10 – 15  காய்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.

13. திராட்சை பொரிந்ததும் ½ கப் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

14. தேங்காய் வறுபட்டதும் அதனை பாயசத்துடன் கலந்து கொள்ளவும்.

15. கடைசியாக ½  தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

16. சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Leave a Reply