See this Recipe in English
இனிப்பு பிடி கொழுக்கட்டை இந்தியா முழுவதிலுமே விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு விநாயகருக்கு விதவிதமாக படைக்கப்படும் கொழுக்கட்டைகள். தேங்காய் பூரண கொழுக்கட்டை, பருப்பு பூர்ண கொழுகட்டை, மோதகம், பிடி கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை என விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து கொண்டாடப்படும். இந்த பதிவில் இனிப்பு பிடி கொழுக்கட்டை சுலபமான முறையில் சுவையாக செய்வது எப்படி என பகிர்ந்துள்ளேன். நீங்களும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பிடி கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்
- கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் கிடைக்கும் அரிசி மாவு அல்லது வீட்டிலேயே பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு பயன்படுத்தலாம்.
- துருவிய தேங்காய் சேர்ப்பதற்கு பதிலாக தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
- தேங்காயுடன் சிறிதளவு எள்ளை வறுத்து சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
- வெல்லக் கரைசலில் அரிசி மாவு சேர்ப்பதற்கு முன்பாக விருப்பப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெல்லக் கரைசலில் அரிசிமாவை சேர்க்கும் பொழுது அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.
இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 1 கப் – 150g
- வெல்லம் – ¾ கப் – 100g
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – ½ கப்
- பாசிப்பருப்பு – ¼ கப்
செய்முறை
1. ஒரு அகலமான வாணலியில் 1 கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
2. குறைவான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
3. மற்றொரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் ¾ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
5. வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
6. வெல்லம் கரைந்த பின்னர் அதனை வடிகட்டி கொள்ளவும்.
7. வெல்லக் கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
8. அதனுடன் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
9. அதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்.
10. ¼ கப் பாசிப்பருப்பை பிரஷர் குக்கரில் மூன்று விசில் வைத்து வேக வைத்து அதனை சேர்த்துக் கொள்ளவும்.
11. வெல்லக் கரைசல் கொதிக்கும்போது அதில் வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.
12. குறைவான தீயில் வைத்து கிளறவும்.
13. மாவு திரண்டு வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
14. ஓரளவுக்கு ஆறிய பின்னர் கைகளில் நெய் தடவி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கை தடம் பதியும்படி பிடித்துக் கொள்ளவும்.
15. தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை நெய் தடவிய தட்டில் வைக்கவும்.
16. ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
17. அதில் கொழுக்கட்டைகளை வைத்து மூடி வைத்து 7 – 8 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
18. சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.