பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது. பொடி இட்லி என்பது சின்ன சின்ன இட்லிகள் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து, இட்லி பொடி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு மிதமான சூட்டில் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறப்படுகிறது. அதனை நீங்கள் அப்படியே அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்
கருவேப்பிலை -¼ கப்
காய்ந்த மிளகாய்- ½ கப்
உளுத்தம்பருப்பு-¼ கப்
கடலைப்பருப்பு -¼ கப்
சீரகம் -1 தேக்கரண்டி
மிளகு – 4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பெருங்காயத் தூள் -½ தேக்கரண்டி
செய்முறை
கருவேப்பிலை இலைகளை கழுவி காயவைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும் அல்லது கருவேப்பிலை இலைகள் சுருண்டு வரும்வரை வறுக்கவும்.
காய்ந்த மிளகாய்களை மிதமான சூட்டில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
இப்பொழுது உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.
பின்னர் கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களை ஒரு தட்டில் காய வைக்கவும்.
பின்னர் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இட்லி பொடி தயார் அதனை ஒரு ஏர் டைட் கண்டைனரில் மூடி வைத்துக் கொள்ளவும்.
(மேற்கண்டவற்றை வறுப்பதற்கு எண்ணெய் சேர்க்க தேவையில்லை வெறும் வாணலியில் வறுக்கவும்.)
பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் -2 தேக்கரண்டிகடுகு – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை -10 இலைகள்
கொத்தமல்லி சில இலைகள்
15 முதல் 20 சின்ன இட்லிகள் அல்லது ஆறு சாதாரண இட்லிகள்
இட்லி பொடி- 2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
பொடி இட்லி செய்ய ஆறிய இட்லிகளை பயன்படுத்தவும் அல்லது சூடான இட்லியை ஆறவைத்து பயன்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் இட்லிகளை சேர்த்து கலக்கவும்.
அதனுடன் இரண்டு தேக்கரண்டி இட்லி பொடி சேர்க்கவும்.
பின்னர் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
அதனை மிதமான சூட்டில் கிளறவும்.
மென்மையாக கிளறி, நன்கு கலந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பொடி இட்லி தயார்.