Burger Vadai in Tamil | பர்கர் வடை | Burger Vada | Vada Burger recipe

See this Recipe in English

பர்கர் வடை ஒரு வித்தியாசமான,  சுவைமிகுந்த, புதுமையான, குழந்தைகள் விரும்பி உண்கிற வகையிலான உணவு வகை. இது உளுந்து வடையில் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் சீஸ் போன்றவை வைத்து செய்யப்படுகின்ற புதுமையான பர்கர் வகை. பர்கர் என்பது, பன் உள்ளே காய்கறிகள் சேர்த்து செய்த வடை,  லெட்டூஸ், வெங்காயம்,  தக்காளி,  மயோனைஸ் ஆகியவற்றை வைத்து செய்யப்படும்.  அதேபோல் பர்கர் வடையில் பன் வைப்பதற்கு பதிலாக உளுந்த வடை  உள்ளே  உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி,  சீஸ், ஆகியவற்றை வைத்து செய்யப்படுகிறது.  சுவையான வித்தியாசமான பர்கர் வடையை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பர்கர் வடை செய்ய சில குறிப்புகள்

  • வடை செய்யும் போது முடிந்தவரையில் பெரிய வடையாக செய்து கொள்ளவும்.
  • தக்காளி சாஸுடன் மயோனைஸ் சேர்த்து தடவிக் கொள்ளலாம்.
  • உருளைக்கிழங்கு மசாலா செய்யும் பொழுது அதனுடன் கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், போன்ற விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
  • வடை மாவில் வெங்காயம், கொத்தமல்லி உடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதர வகைகள் – தவா பர்கர், வெஜிடபிள் பர்கர்,  சோயா கட்லட், பாசிப்பருப்பு இட்லி,  மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா , மொரு மொரு வடை, காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், ரவா இட்லி, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, வெஜிடபிள் கட்லெட்.

 

 

See this Recipe in English

 

வடை செய்ய தேவையான பொருட்கள் 

  • உளுத்தம் பருப்பு – ½ கப் – 100g
  • வெங்காயம் – 1
  • கொத்தமல்லி  இலை –  தேவையான அளவு
  • அரிசி  மாவு –  2 தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான  அளவு
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 2 – வேகவைத்து மசித்தது
  • சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி
  • சீரகம் – ½  தேக்கரண்டி
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 5  பற்கள்
  • தக்காளி – 1
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி
  • சில்லி சாஸ் – 1  தேக்கரண்டி
  • சோயா சாஸ் – 1  தேக்கரண்டி

இதர பொருட்கள்

  • டொமேட்டோ சாஸ் –  தேவையான அளவு
  • சீஸ் துண்டுகள் –  தேவையான அளவு
  • லெட்யூஸ் –  தேவையான அளவு
  • வெங்காய துண்டுகள் –  தேவையான அளவு
  • தக்காளி துண்டுகள் –  தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ½  கப் வெள்ளை  குண்டு உளுத்தம்பருப்பை ஒருமுறை கழுவிவிட்டு 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் .

2. உருளைக்கிழங்கு மசாலா செய்ய ஒரு அடி கனமான வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனுடன்  1/2 தேக்கரண்டி சீரகம்  சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

4. வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 5 பல் பூண்டை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. பச்சை வாசனை போக பூண்டை வதக்கிய பின்னர் 1 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. தக்காளி மென்மையாக வதங்கிய பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

7. மீண்டும் வதங்கிய பின்னர் 1 தேக்கரண்டி சில்லி சாஸ் மற்றும் 1 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.

8. அதனுடன் 2 உருளைக்கிழங்குகளை வேக வைத்து மசித்து சேர்த்துக் கொள்ளவும்.

 9. உருளைக்கிழங்கு மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் பிரிந்து வரும்வரை வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மசாலா தயாரானதும் தனியே எடுத்து வைக்கவும்.

10. உளுத்தம் பருப்பு நன்றாக ஊறிய பின்னர்,  கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் சிறிது கொத்தமல்லி,  2 தேக்கரண்டி அரிசி மாவு,  தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

11. நன்றாக கலந்த பின்னர் பெரிய உருண்டைகளாக உருட்டி தட்டி  நடுவில் ஒரு ஓட்டை போடவும்.

12. அதனை மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் .

13. எல்லா  வடைகளையும் பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

14. கத்தி வைத்து வடையை பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.

15. பின்னர் 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் தடவி கொள்ளவும்.

16. அதன் மீது தேவையான அளவு உருளைக்கிழங்கு மசாலா வைத்து லேசாக தட்டி வைக்கவும்.

17. பின்னர் 1  துண்டு சீஸ், லெட்யூஸ், தக்காளி, வெங்காயம்  ஆகியவற்றை ஒவ்வொன்றாக மேலே அடுக்கவும்.

18. இப்பொழுது வடையை மூடி வைத்து பரிமாறவும். சுவையான பர்கர் வடை தயார். 

Leave a Reply