Poornam Kozhukattai in Tamil | கடலைப் பருப்பு பூரணகொழுகட்டை | Kadalai Paruppu Poornam Kozhukattai Recipe

See this Recipe in English

கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை பாரம்பரியமிக்க கொழுக்கட்டை வகைகளில் ஒன்று இவை திருச்சி,  தஞ்சை,  நாகப்பட்டினம்,  கும்பகோணம்,  ஆகிய இடங்களில் பிரபலமாக செய்யப்படுகிறது.   கடலை பருப்பு, தேங்காய்,  வெல்லம்,  ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான கொழுக்கட்டை வகை.


சுவையான கடலை பருப்பு பூரணம் செய்ய சில குறிப்புகள்

  • கடலைப்பருப்பை ½  மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பின்னர் வேக வைத்தால் மென்மையாக இருக்கும்.
  • பாத்திரத்தை பயன்படுத்துவதைவிட பிரஷர் குக்கரில் வேக வைக்கும் பொழுது பருப்பு நன்றாக வெந்து மென்மையாக இருக்கும்.
  • கடலைப்பருப்பை ஒரு கரண்டி அல்லது மத்து வைத்து மசித்து விடலாம் அல்லது மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளலாம்.
  • வெல்லம் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • பூரணம் ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். அது மிகவும் திடமாக இருந்தால், அது குளிர்ந்த பிறகு கடினமாகிவிடும்.
  • இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம்.
  • அரிசி மாவு பயன்படுத்துவதாக இருந்தால் அதனை வறுத்த பின்னர் பயன்படுத்தவும்.
  • கொழுக்கட்டைகள் வெந்தபிறகு சூடாக இருக்கும் பொழுது எடுக்காமல் ஓரளவு ஆறிய பின்னர் எடுத்தால் ஒட்டாமல் வரும்.

இதர வகைகள்

மணி கொழுக்கட்டை

ராகி பிடி கொழுக்கட்டை

இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

எள்ளு பூரண கொழுக்கட்டை

 பால் கொழுக்கட்டை

 

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு  – ½  கப்
  • வெல்லம் – 1  கப்
  • துருவிய தேங்காய் – ¼ கப்
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி

மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

  • கொழுக்கட்டை | இடியாப்ப மாவு – 1  கப்
  •  உப்பு –  தேவையான அளவு
  •  சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி

செய்முறை

1. கடலைப்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊற வைத்த பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் சேர்த்து 5 விசில் வைத்து வேக வைக்கவும்.

3. கடலைப்பருப்பு வெந்த பின்னர் அதனை மசித்து விடவும்.

4. ஒரு பானில் ஒரு 1 வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். 

5. அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

6. வெல்லம் கரைந்த பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

7. அதனுடன் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

8. அதனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

 

9. பின்னர் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கலக்கவும்.

10. கலவை ஓரளவு இறுகி வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

11. பூரணம் இறுகி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். 

12. மேல் மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் சூடானதும் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும்.

13. அதனுடன் 1 கப் கொழுக்கட்டை மாவு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

14. கரண்டியின் காம்பு கொண்டு மென்மையாக  திரண்டு வரும் வரை கலக்கவும்.

15. பின்னர் ஒரு பௌலில் கொட்டி ஆறவிடவும். கை தாங்கும் சூடு வந்தபிறகு அதனை மென்மையாக பிசைந்து வைக்கவும்.

16. கொழுக்கட்டை செய்வதற்கு  ஒரு வாழை  இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை வைத்து தட்டி கொள்ளவும்.

17.  அதன் மீது ஒரு தேக்கரண்டி அல்லது சிறிதளவு பூரணம் வைத்து மடித்து ஓரங்களை ஒட்டவும்.

18. ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்,  பின்னர் தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

19. ஓரளவு ஆறிய பின்னர் கொழுக்கட்டைகளை எடுக்கவும்.

20. சுவையான பருப்பு பூரணம் கொழுக்கட்டை தயார்.

Leave a Reply