Ulundhu Poorna Kozhukattai in Tamil | உளுந்து பூரணம் கொழுக்கட்டை | Kara Kozhukattai Recipe

See this Recipe in English

உளுந்து பூரண கொழுக்கட்டை உளுத்தம் பருப்பை வேக வைத்து தாளித்து கார சுவையுடன் செய்யக்கூடிய கொழுக்கட்டை.  விநாயகர் சதுர்த்தி நாட்களில் தேங்காய் பூரணம் மற்றும் கடலைப் பருப்பு பூரணம் போன்ற கொழுக்கட்டைகளை இனிப்பு சுவையுடன் சாப்பிடும்பொழுது திகட்டும் வாய்ப்புள்ளது. இதுபோல உளுந்து பூரணம் கொழுகட்டை சாப்பிடும்பொழுது சுவை யாக இருக்கும் அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்தது.

 சுவையான உளுந்து பூரணம் கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்

  • உளுந்தை அரைக்கும் பொழுது கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும், நைசாக அரைக்க வேண்டாம்.
  • மிளகாய் உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • இட்லி தட்டில் வேகவைத்து எடுத்த பின்னர் அதனை உதிர்த்துக் கொள்ளவும், அல்லது மிக்சி ஜாரில் சேர்த்து மீண்டும் ஒருமுறை இலேசாக அரைக்கவும்.
  • மேல் மாவு செய்வதற்கு இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம்.
  • அரிசி மாவு பயன்படுத்துவதாக இருந்தால் அதனை வறுத்த பின்னர் பயன்படுத்தவும்.
  • கொழுக்கட்டைகள் வெந்தபிறகு, சூடாக இருக்கும் பொழுது தட்டில் இருந்து எடுக்காமல் ஓரளவு ஆறிய பின்னர் எடுத்தால் ஒட்டாமல் வரும்.

இதர வகைகள்

ராகி பிடி கொழுக்கட்டை

இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

 கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

எள்ளு பூரண கொழுக்கட்டை

 

 

தேவையான பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு – ½  கப்
  • பச்சை மிளகாய் – 3
  • காய்ந்த மிளகாய் – 1
  • உப்பு –  தேவையான அளவு
  • சமையல்எண்ணை – 1  தேக்கரண்டி
  • கடுகு –  ½  தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – ½  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –  சிறிது
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • துருவிய தேங்காய் – 4  தேக்கரண்டி

மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

  • கொழுக்கட்டை/ இடியாப்ப மாவு – 1  கப்
  • உப்பு –  தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி

செய்முறை

1. வெள்ளை உளுத்தம் பருப்பை ஒரு முறை கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.

3. அதனுடன் 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு காய்ந்த மிளகாய்,  சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

4. ஒரு இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பை சிறிது சிறிதாக உருட்டி லேசாக தட்டி அதன் மீது  வைக்கவும்.

5. இட்லி  பாத்திரத்தில் வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

 6. வெந்த பின்னர் அதனை உதிர்த்துக் கொள்ளவும்.

7. ஒரு பானில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு,  அரை தேக்கரண்டி  உளுத்தம் பருப்பு,  சிறிதளவு கறிவேப்பிலை ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக்  கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நான்கு தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

8. பின்னர் உதிர்த்து வைத்துள்ள உளுந்து சேர்த்து கிளறவும்.

9. உளுத்தம் பருப்பு பூரணம் தயார் இதனை தனியே எடுத்து வைக்கவும்.

10. மேல் மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.தண்ணீர் சூடானதும் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும்.

11. அதனுடன் 1 கப் கொழுக்கட்டை மாவு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

12. கரண்டியின் காம்பு கொண்டு மென்மையாக  திரண்டு வரும் வரை கலக்கவும்.

13. பின்னர் ஒரு பௌலில் கொட்டி ஆறவிடவும்.  கை தாங்கும் சூடு வந்தபிறகு அதனை மென்மையாக பிசைந்து வைக்கவும்.

14. கொழுக்கட்டை செய்வதற்கு  ஒரு வாழை  இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை வைத்து தட்டி கொள்ளவும்.

 15. அதன் மீது ஒரு தேக்கரண்டி அல்லது சிறிதளவு பூரணம் வைத்து மடித்து ஓரங்களை ஒட்டவும்.

16. ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்,  பின்னர் தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

17. ஓரளவு ஆறிய பின்னர் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.

18. சுவையான உளுந்து பூரண கொழுக்கட்டை தயார்.

Leave a Reply