Broken Wheat Payasam in Tamil | கோதுமை ரவை பாயசம் | Cracked wheat kheer | Wheat payasam

கோதுமை ரவை பாயசம் கோதுமை ரவா என்பது உடைத்த கோதுமை.  இது எல்லா கடைகளிலும் கிடைக்கும், கோதுமை குருணை என்றும் சொல்லலாம்.  கோதுமை ரவை கிடைக்கவில்லை என்றாலும் முழு கோதுமையை மிக்ஸியில் போட்டு ரவை பக்குவத்திற்கு உடைத்துக் கொள்ளலாம்.  கோதுமை ரவை பாயசம், கோதுமை ரவை,  வெல்லம்,  பால் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பாயசம்.  இதனை பாயசமாக சாப்பிடுவதை தவிர்த்து கஞ்சி போன்றும் செய்து குடிக்கலாம். கஞ்சி செய்வதற்கு தேங்காய், முந்திரிப்பருப்பு, நெய் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும். அதேபோல வெல்லத்தை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வெல்லம் சேர்க்காமல்  சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

 சுவையான கோதுமை ரவை பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • கோதுமை ரவை பாயசம் செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் கோதுமை ரவை பயன்படுத்தலாம் அல்லது முழு கோதுமையை மிக்ஸியில் சேர்த்து ரவை பக்குவத்திற்கு உடைத்துக் கொள்ளலாம்.
  • வேகவைப்பதற்கு குக்கரை பயன்படுத்திக்கொள்ளலாம், அதற்கு ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் வைத்துக்கொள்ளலாம்.
  • பாத்திரத்தில் வேக வைப்பதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும்.
  • வெல்லம் சேர்த்த பிறகு 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்து அதற்குப் பின்னர் பால் சேர்க்கவும்.
  • காய்ச்சி ஆறவைத்த பால் சேர்க்கலாம் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால் தேங்காயை வறுத்து சேர்க்க வேண்டியதில்லை.
  • வெல்லம் உங்கள் சுவைக்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளலாம்.
  • முந்திரிப்பருப்பு, நெய், மற்றும் தேங்காய் சேர்க்காமல் அதே சமயத்தில் வெல்லத்தை குறைத்து சேர்த்து கஞ்சியாக செய்து சாப்பிடலாம். 

கோதுமை பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை –  1/2 கப் – 50g
  • வெல்லம் – 1 கப் – 250g
  • நெய் –  2 மேஜைக்கரண்டி
  • முந்திரிப் பருப்பு – 1/4 கப்
  • தேங்காய் –  1/4 கப் 
  • பால் –  ஒரு கப் – 250ml
  • ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

 3. வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து தனியே எடுத்து வைக்கவும்.

4. ஒரு  அகலமான பேனில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அரை கப் கோதுமை ரவையை கழுவி சேர்த்துக் கொள்ளவும்.

 5. மிதமான தீயில் வைத்து கோதுமை ரவையை வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

6. பின்னர் அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்/ பஞ்சு போன்று நன்றாக வேகும் வரை வைக்கவும்.

7. மற்றொரு பானில் ஒரு மேஜைக்கரண்டி  நெய் சேர்த்து சூடானதும் கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

8. அதனுடன் கால் கப் அளவு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

9. தேங்காய் லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

10. கோதுமை ரவை நன்கு வெந்தபிறகு அதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

11. வெல்லமும், கோதுமை ரவையும் ஓரளவு திக்காகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

12. அதனுடன் ஒரு கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கிளறவும்.

 13. கொதிக்க ஆரம்பித்த பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

14. அதனுடன் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

15. சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை ரவை பாயசம் தயார்.

Leave a Reply