See this Recipe in English
லெமன் சர்பத் | லெமன் ஸ்குவாஷ் வெயில் நேரங்களில் சுவையாகவும் அதேநேரத்தில் ஆரோக்கியமாகவும் குடிப்பதற்கு கடையில் வாங்குவதை காட்டிலும் வீட்டிலேயே செய்துவைக்கும் குளிர்பானங்களை நல்லது. குறிப்பாக எலுமிச்சை பழம் போன்று உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வற்றை சேர்த்துக் கொள்ளும் பொழுது உடல் குளிர்ச்சியாகவும் வெயிலினால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவும். அதே சமயத்தில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய எலுமிச்சைபழம் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
பல்வேறு நன்மைகள் நிறைந்த எலுமிச்சை பழத்தை வைத்து எலுமிச்சை பழ சர்பத் அல்லது லெமன் ஸ்குவாஷ் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை ஒருமுறை செய்து வைத்தால் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நினைக்கும் போதெல்லாம் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். மேலும் வெயில் நேரங்களில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் நொடியில் எலுமிச்சை பழச்சாறு செய்து குடிக்கலாம். லெமன் ஸ்குவாஷ் வைத்து லெமன் சர்பத், லெமன் ஜூஸ், லெமன் சோடா போன்ற விதவிதமான குளிர்பானங்களை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
சுவையான லெமன் ஸ்குவாஷ் செய்ய சில குறிப்புகள்
- ஒரு பங்கு எலுமிச்சை பழச் சாற்றிற்க்கு இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- லெமன் ஸ்குவாஷ்ல் சாதாரண தூள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பிங்க் சால்ட், பிளாக் சால்ட், லெமன் சால்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
- சுத்தமான ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் லெமன் ஸ்குவாஷ் செய்து வைத்தால் மூன்று மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
- சக்கரை பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும், நன்றாக ஆறிய பின்னர் எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும், சூடாக இருக்கும் பொழுதே எலுமிச்சை பழ சாறு சேர்த்தால் லெமன்ஸ் ஸ்குவாஷ் கசக்கும் வாய்ப்புள்ளது.
இதர வகைகள்
கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள்
கஸ்டர்ட் சர்பத்
பால் சர்பத்
நன்னாரி சர்பத்
பலுடா
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம் – 600g
- சர்க்கரை – 2 கப் – 400g
- உப்பு – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சர்பத் செய்ய தேவையான பொருட்கள்
- ஊறவைத்த சப்ஜா விதைகள் – 2 தேக்கரண்டி
- லெமன் ஸ்குவாஷ் – 4 தேக்கரண்டி / தேவையான அளவு
- தண்ணீர் / ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
ஸ்குவாஷ் செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
3. சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
4. சர்க்கரை கரைந்த பின்னர், குறைவான தீயில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
5. பின்னர் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
6. 600 கிராம் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டி பிழிந்து கொள்ளவும்.
7. ஒரு கப் (250ml) எலுமிச்சை பழ சாறு வரும் வரை பிழிந்து கொள்ளவும். விதை, நார் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்
8. சர்க்கரை பாகு நன்றாக ஆறிய பின்னர் எலுமிச்சை பழ சாரை அதனுடன் சேர்க்கவும்.
9. அதனுடன் ஒரு தேக்கரண்டி அல்லது தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
10. லெமன் ஸ்குவாஷ் தயாராக உள்ளது இதனை சுத்தமான டப்பாவில் மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
எலுமிச்சை சர்பத் செய்முறை
1. ஒரு டம்ளரில் 2 தேக்கரண்டி ஊறவைத்து சப்ஜா விதைகள் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 5 தேக்கரண்டி லெமன் ஸ்குவாஷ் சேர்க்கவும்.
3. பின்னர் தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கவும்.
4. சுவையான எலுமிச்சை பழ சர்பத் தயார்.