Summer Drinks in Tamil | கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள் | 5 different summer drinks

கோடை காலத்திற்கு ஏற்ற ஐந்து விதமான பானங்கள் வெயில் காலத்தில், அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில் வெளியே சென்று வீட்டிற்கு  வரும்பொழுது மிகவும் சோர்வாக இருக்கும். அதே சமயத்தில் வெயில் காலங்களில் அடிக்கடி நீர் சத்து குறைபாடும் ஏற்படும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலமாக நீர்ச்சத்து குறைபாட்டை ஓரளவு சரி செய்யலாம்.   தண்ணீர் தவிர்த்து ஏராளமான ஆரோக்கியமான பானங்களை நாம் வீட்டிலேயே செய்து குடிப்பதன் மூலம் நீர் சத்து குறைபாட்டை சரி செய்யலாம் வெயிலுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும்.  


நீர்மோர்,  ரோஸ் மில்க்,  லஸ்ஸி,  கிர்ணி பழச்சாறு,  புதினா எலுமிச்சை சாறு போன்ற ஆரோக்கியமான பானங்களை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன். சுவை நிறைந்த பானங்களை பாரம்பரியமிக்க முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து கொடுத்தால் உடலுக்கு குளிர்ச்சியுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

இதர வகைகள் – பால் சர்பத், பழ சர்பத்ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா

 

 

நீர்மோர் செய்ய தேவையான பொருட்கள்

  • புளித்த தயிர் – 1 கப் – 200g
  • இஞ்சி – 1  துண்டு
  • பச்சை மிளகாய் – 1
  • கருவேப்பிலை –  சிறிதளவு
  • சீரகம் – ½  தேக்கரண்டி
  • கொத்தமல்லி –   சிறிதளவு
  • உப்பு –  தேவையான அளவு

ரோஸ் மில்க் செய்ய தேவையான பொருட்கள்

  • பால் – ½  லிட்டர் – 500ml
  • சர்க்கரை – ¼  கப் – 50g
  • ரோஸ் சிரப் – 3  தேக்கரண்டி

லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்

  • புளிப்பில்லாத தயிர் – 1 கப் – 200g
  • சர்க்கரை  – ¼  கப் – 50g
  • ஏலக்காய் பொடி –  ½  தேக்கரண்டி
  • ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

 புதினா எலுமிச்சை சாறு செய்ய தேவையான பொருட்கள்

  • புதினா –    சிறிதளவு
  • இஞ்சி  – 1 துண்டு
  • சர்க்கரை – 2  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • எலுமிச்சை பழம் – 1 

கிர்ணி பழச்சாறு

  •  கிர்ணி பழம் –  தேவையான அளவு
  •  தேன் – 2  தேக்கரண்டி

நீர்மோர் செய்முறை

1. நீர்மோர் செய்வதற்கு  ஒரு மிக்ஸி ஜாரில் 1  கப்  புளிப்பான தயிர் எடுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்,  மற்றும் ஒரு பச்சை மிளகாய், 1/2  தேக்கரண்டி சீரகம், சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லிசேர்த்துக் கொள்ளவும்.

3. 3 முதல் 4 கப் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

4. சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.  விருப்பப்பட்டால்  ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம்.

ரோஸ் மில்க்  செய்முறை

1. ரோஸ் மில்க் செய்வதற்கு 1/2 லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்து பின்னர் ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்துக் கொள்ளவும்.  அதன் பின்னர் அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். 

2. அதனுடன் 1/4 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்னர் 3 தேக்கரண்டி ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும்.

4. தேவைப்பட்டால் சிறிதளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

 லஸ்ஸி செய்முறை

1. லஸ்ஸி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் புளிப்பில்லாத தயிர் 1 கப் எடுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1/4 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்னர் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

 4. அதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்,  ஐஸ்கட்டிகள் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் நீங்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

5. நைசாக அரைத்து,  ஜில்லென்று பரிமாறவும்.

6.  சிறிதளவு பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி பரிமாறவும்.

புதினா எலுமிச்சை சாறு செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.

2. அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  மேலும் 2 தேக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.

3. அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த பின் வடிகட்டவும். மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

5. மேலும் 2 முதல் 3 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

6. டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும் விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம்.

கிர்ணி பழ சாறு

1. கிர்ணிப் பழத்தின் தோல் மற்றும் விதைகளை  நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  தேவையான அளவு பழத்தை மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.

2. அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கொள்ளவும்,  தண்ணீர் சேர்க்க தேவையில்லை. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

3. டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும் விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம். 

Leave a Reply