Honey Cake in Tamil | ஹனி  கேக் | Bakery style Honey Cake | Honey Cake without oven

ஹனி  கேக் பேக்கரிகளில் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கேக் வகை. இதனை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம்.  முட்டை சேர்க்காமலும் செய்யலாம், முட்டை சேர்த்தும் செய்யலாம். ஓவன் மற்றும் beater ஆகியவற்றை பயன்படுத்தாமல் சுலபமான முறையில் ஹனி கேக் செய்முறை  வழங்கியுள்ளோம்,  சுவையான கேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான   ஹனி கேக் செய்ய சில குறிப்புகள்

  1. மிக்ஸி ஜாரில் முட்டை அடிக்கும் பொழுது அதிக நேரம் அடிக்கக்கூடாது ஐந்து முதல் பத்து வினாடிகளுக்குள் அடித்தால் போதும்.
  2. Beater பயன்படுத்தினால்  3 முதல் 4 நிமிடங்களுக்கு அல்லது முட்டை fluffy ஆகும் வரை அடித்துக் கொள்ளவும்.
  3. ஒன்றரை கப் மைதா மாவு – முக்கால் கப் சர்க்கரை சரியாக இருக்கும்,  அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  4. குக்கரில் கேக் செய்யும் பொழுது உப்பு அல்லது மணலை பரப்பி அதன் மீது  ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக்கை வேக வைக்கலாம்.
  5. குக்கரை மூடும் பொழுது கேஸ்கட் மற்றும் வெயிட் ஆகியவற்றை நீக்கி விட்டு மூடவும்.
  6. அடுப்பில் கேக் செய்யும் பொழுது குறைவான தீயில் வைத்து வேக வைக்கவும்.
  7. ஒரு டூத் பிக் அல்லது குச்சி வைத்து  குத்தி பார்க்கும்பொழுது ஒட்டாமல் வந்தால் கேக் தயார்,  மாவு ஒட்டி இருந்தால் இன்னும் சிறிது நேரத்திற்கு வேக வைக்கவும்.
  8. சுகர் சிரப் செய்யும்பொழுது நீங்கள் விருப்பப்பட்டால் ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  9. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து தேக்கரண்டி வரை தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
  10. ஃப்ரூட் ஜாம் சேர்த்து கொதித்து வரும் பொழுது உடனேயே கேக்கின் மீது தடவவும் ஆற வைத்தால் மீண்டும் கெட்டியாகிவிடும்.
  11. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்க்கு பதிலாக,  சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
  12. குறைவான தீயில் 40 முதல் 50 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  13. நீங்கள் ஓவன் பயன்படுத்தினால் 30 முதல் 40 நிமிடங்களுக்கு  180 டிகிரி செல்சியஸில்  பேக் செய்யவும்.

இதர கேக் வகைகள் –  முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக்முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்

 

ஹனி கேக் செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா மாவு  – 1 ½  கப்
  •  சர்க்கரை  –  ¾  கப்
  •  முட்டை  – 3
  •  வெண்ணை  –  2 தேக்கரண்டி
  •  பேக்கிங் பவுடர்  – 1 தேக்கரண்டி
  •  வெண்ணிலா எசன்ஸ் – 1 மேஜைக்கரண்டி
  •  எண்ணெய்  – ¼  கப்
  •  பால்  – ½  கப்
  •  ப்ரூட் ஜாம்  – 3 தேக்கரண்டி

 சுகர் சிரப்  செய்ய தேவையான பொருட்கள்

  •  சர்க்கரை – 2 தேக்கரண்டி
  •  தேன்  – 3 தேக்கரண்டி
  •  ஆரஞ்சு ஃபுட் கலர்   – 1 சிட்டிகை

Desiccated coconut செய்ய தேவையான பொருட்கள்

  • தேங்காய் துருவியது  – 6 தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் 3 முட்டை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

3. மூடி வைத்து 5 முதல் 10 வினாடிகளுக்கு அடித்துக் கொள்ளவும்.

4. அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய்,  ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்,  மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது ஐந்து வினாடிகளுக்கு அடித்துக்கொள்ளவும்.

6. அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

7.  கால் கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

8. அரை கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கொள்ளவும்.

9. நன்கு கலந்து கொள்ளவும்.

10. இப்போது மீதமுள்ள அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

11. ஒன்றரை கப் மைதா மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.

12. அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

13. ஒரு பேக்கிங் பேன் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் அல்லது மைதா மாவு போட்டு கோட் செய்து கொள்ளவும். தயாராக வைத்துள்ள மாவை அதனுடன் ஊற்றவும்,  ஊற்றிய பின்னர் லேசாக தட்டவும்.

14. ஒரு அகலமான பாத்திரத்தில் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு பிரிஹீட் செய்து கொள்ளவும்.

 15. பத்து நிமிடங்களுக்குப் பின்னர் cake pan அதனுள் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 40 முதல் 50 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.

16. 50 நிமிடங்களுக்கு பின்னர் ( கேக் வெந்து விட்டதா என்று ஒரு குச்சி வைத்து குத்தி பார்க்கவும்) தனியே எடுத்து வைக்கவும்.

17. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்,  தண்ணீர் சூடானதும் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

18. சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பின்னர் மூன்று தேக்கரண்டி தேன் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

 19.அதனுடன் ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறம் சேர்த்து கலக்கவும்,  நன்கு கலந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

20. ஒரு மிக்ஸி ஜாரில் 6 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

21. தண்ணீர் சேர்க்காமல் அரைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

22. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வருத்து தேங்காயில் உள்ள ஈரப்பதம் போனபின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

23. தயார் செய்து வைத்துள்ள கேக் ஆறிய பின்னர் மேல்பாகம் உப்பியிருந்தால் வெட்டி சமன்படுத்தி கொள்ளவும்.

24. ஒரு டூத் பிக் அல்லது சிறிய குச்சி வைத்து சிறுசிறு துளைகள் போடவும்.

25. தயாராக வைத்துள்ள சர்க்கரை சிரப்பை அதில் சேர்க்கவும்.

26. ஒரு பேனில் 3 தேக்கரண்டி ப்ரூட் ஜாம் சேர்த்துக் கொள்ளவும்.

27. கரையும் வரை நன்கு கலக்கவும்.

28. இப்பொழுது அதனை கேக்கின் மீது ஊற்றி ஒரு ஸ்பூனால் சமன்படுத்தி கொள்ளவும்.

29. அதன்மீது தயார் செய்து வைத்துள்ள தேங்காயை  தூவி அழகுபடுத்தவும்.


30. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும் சுவையான கேக் தயார்.

 

Leave a Reply