See this Recipe in English
பட்டூரா எனப்படும் மைதா பூரி வட இந்தியாவில் முக்கியமாக பஞ்சாபில் மிகவும் புகழ்பெற்றது. இந்த பூரி மைதா, தயிர், ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் மென்மையாக வாயில் கரையும் சுவையுடன் இருக்கும். பட்டூரா, சென்னா மசாலா எனப்படும் கொண்டைகடலை குருமா உடன் மிகவும் சுவையாக இருக்கும். வட இந்திய மக்கள் இதனை விரும்பி உண்பார்கள். சென்னா பட்டூரா மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான உணவு வகை. நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
பஞ்சுபோன்ற பட்டூரா செய்ய சில குறிப்புகள்
- மாவை பிசைவது மிகவும் முக்கியமானது கிட்டத்தட்ட 10 – 12 நிமிடங்கள் தொடர்ந்து மாவை பிசைய வேண்டும்.
- பட்டூரா ஆறியபிறகு பரிமாறினால் சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும்.
- எண்ணெயிலிருந்து எடுத்த பிறகு ஒரு பேப்பர் டவலில் வைத்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிய பிறகு பரிமாறவும்.
- விருப்பப்பட்டால் மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்துக் கொள்ளலாம். ரவை சேர்ப்பதால் பட்டூரா ஓரளவிற்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
- புளிப்பு தயிர் பயன்படுத்த வேண்டும் . புளிப்பு நொதித்தல் செயல்முறையை துரிதப்படுத்தும் மற்றும் மாவு கூடுதல் மென்மையாக இருக்கும்.
இதர உணவுகள் – பாசிப்பருப்பு இட்லி, காலிஃப்ளவர் சாதம், முட்டை ஃப்ரைட் ரைஸ், புதினா சாதம், தேங்காய் சாதம், வாங்கிபாத், மசாலா பாஸ்தா, பூரி செய்வது எப்படி.
See this Recipe in English
பட்டூரா செய்ய தேவையான பொருட்கள்
- 1.5 கப் மைதா
- 1/4 கப் வெண்ணை
- 1/4 கப் தயிர்
- 1/4 தேக்கரண்டி சமையல் சோடா
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1.5 கப் மைதா, 1/4 கப் வெண்ணை, 1/4 கப் தயிர், 1/4 தேக்கரண்டி சமையல் சோடா, தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.
2. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக மாவு பிசைந்து கொள்ளவும்.
3. பின்னர் பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
5. அதனை பூரி போட தகுந்த அளவிற்கு தேய்த்துக் கொள்ளவும்.
6. தயாராக வைத்துள்ள மாவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளவும்.
7. பூரி உப்பலான பிறகு இன்னொரு பக்கம் திருப்பி போட்டு பொரிக்கவும். எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும், சூடான பட்டூரா தயார்.