See this Recipe in English
பாம்பே அல்வா மிகவும் சுலபமான முறையில் 30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக்கூடிய அதே சமயத்தில் சுவை நிறைந்த அல்வா. இது கராச்சி அல்வா, நட்ஸ் அல்வா, என்றும் அழைக்கப்படுகிறது. பாம்பே அல்வா சிறுவயதில் சிறிய சிறிய பாக்கெட்டுகளில் ஒரு ரூபாய் விலையில் கிடைக்கும் இதனை 90 களில் கிடைக்கும் குழந்தைகள் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் வெவ்வேறு நிறங்களில் கண் கவரும் வகையில் இதனை பெட்டிக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வைத்திருப்பார்கள்.
ஜெல்லி போன்று இருக்கும் இந்த அல்வா கான்பிளவர் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மூன்றே மூன்று பொருட்களை பயன்படுத்தி சுவையான அல்வா நீங்களும் இந்த தீபாவளிக்கு செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பாம்பே அல்வா செய்ய சில குறிப்புகள்
- இந்தியாவில் கான்ப்ளவர் என்று அழைக்கப்படுவது, மற்ற நாடுகளில் கார்ன் ஸ்டார்ச் என்று அழைக்கப்படுகிறது. எனவே மாவு வாங்கும் போது தூய வெள்ளை நிறத்தில் மென்மையாக இருக்கும், அதே சமயத்தில் தண்ணீரில் கரையும் தன்மை கொண்டது. அதனை பார்த்து வாங்கவும்.
- சர்க்கரை ஒன்றுக்கு இரண்டு பங்கு வீதம் சேர்த்துள்ளேன், சற்று கூடுதலான இனிப்புச்சுவை தேவைப்பட்டால் மூன்று பங்கு வரை சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு பங்கு சர்க்கரை என்பது மிதமான சுவையைத் தரக்கூடியது.
- கான்பிளவர் எடுத்த அதே விகிதத்தில் நெய் சேர்த்துள்ளேன் விருப்பப்பட்டால் குறைவாகவோ அல்லது சற்று கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
- கேசரி கலர் சேர்ப்பது விருப்பத்திற்கு உட்பட்டது.
- பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை உடைத்து பயன்படுத்தியிருக்கிறேன், பலவிதமான நட்ஸ் வகைகள் சேர்க்கலாம், அல்லது ஏதேனும் ஒரு நட்ஸ் வகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நெய் சிறிது சிறிதாக சேர்க்கவும், ஓரங்களில் நெய் பிரிந்து வரும்வரை அல்வாவை வேகவைக்கவும்.
இதர வகைகள்
கோதுமை அல்வா
கேரட் அல்வா
காசி அல்வா
கோதுமை அல்வா
பாதாம் அல்வா
அசோகா அல்வா
திருநெல்வேலி அல்வா
தேவையான பொருட்கள்
- கான்பிளவர் – ½ கப் – 50g
- சர்க்கரை – 1 கப் – 200g
- நெய் – ½ கப்
- ஆரஞ்சு நிறம் – 1 சிட்டிகை
- பொடித்த நட்ஸ் – ½ கப்
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பவுலில் ½ கப் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்துக் கொள்ளவும்.
2. 1 ½ கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து கொள்ளவும்.
3. மாவு கரையும் வரை கலக்கவும்.
4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
6. சர்க்கரை கரைந்த பின்னர் அரைத்து வைத்துள்ள கான்பிளவர் மாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.
7. குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும் கிளறும் போது லேசாக கட்டிகள் உருவானால் பயப்பட வேண்டியதில்லை அது இயல்பானதே.
8. கான்பிளவர் மாவு ஓரளவு கெட்டியாக கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
9. நெய்யை முழுமையாக சேர்த்த பின்னர் பொடித்த நட்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
10. இப்பொழுது மிதமான தீயில் வைத்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
11. பின்னர் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
12. பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
13. ஒரு தட்டில் நெய் தடவி பின்னர் தயார் செய்துள்ள அல்வாவை அதில் சேர்க்கவும்.
14. அதனை ஒரு கரண்டி கொண்டு சமமாக செய்த பிறகு ஓரளவு கெட்டியாகும் வரை ஆறவைக்கவும்.
15. அல்வா ஆறிய பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
16. சுவையான பாம்பே அல்வா தயார்.